காந்தாரா சாப்டர் 1 படத்திற்காக ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்கவேண்டும் என இயக்குநர் அட்லீ பாராட்டு தெரிவித்துள்ளார்.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான திரைப்படம் காந்தாரா. மொழிகளை கடந்து அனைத்து இந்திய திரை ரசிகர்களையும் கவர்ந்த இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்நிலையில் இப்படத்தின் முந்தைய கதைக்களமாக ’காந்தாரா எ லெஜண்ட் சாப்டர் 1' படம் வெளிவந்துள்ளது. ஜெயராம், ருக்மிணி, குல்ஷன் தேவய்யா, ப்ரமோத் ஷெட்டி எனப் பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் கடந்த அக்டோபர் 2-ம் தேதி வெளியானது.
இப்படத்தின் திரைக்கதை, மேக்கிங், பின்னணி இசை என அனைத்தும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. அதுமட்டுமில்லாமல் வெளியான 7 நாட்களில் 500 கோடி வசூல் செய்து சாதனை பட்டியலிலும் இணைந்துள்ளது.
காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் அனைத்து தரப்பிலிருந்தும் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், திரைப்பட இயக்குநர் அட்லீயும் ரிஷப் ஷெட்டிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
காந்தாரா சாப்டர் 1 படம் மற்றும் ரிஷப் ஷெட்டி குறித்து இந்தியா டுடே உடன் பேசியிருக்கும் இயக்குநர் அட்லீ, "காந்தாரா சாப்டர் 1 படம் வெளியான அன்று நான் ஆம்ஸ்டர்டமில் இருந்தேன். அப்போது 2 மணிநேரத்திற்கும் மேலாக பயணம் செய்து தியேட்டர்க்கு சென்று படத்தை பார்த்தேன். உடனடியாக ரிஷப் ஷெட்டிக்கு போன் செய்து பாராட்டுகளை தெரிவித்தேன். ஒரு இயக்குனராக இந்த மாதிரியான படத்தை உருவாக்குவது மிக கடினமான விசயம். ஆனால் ஒரு நடிகராகவுமம் இயக்குநராகவும் அதை திரையில் கொண்டுவந்துள்ளார். இந்த படத்திற்க்காக ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்கவேண்டும்" என்று பாராட்டி பேசியுள்ளார்.