ARTIFICIAL AI
சினிமா

சாம் ஆல்ட்மேன் கதையைச் சொல்லும் ‘ARTIFICIAL’ - AI செய்யும் தவறுகளைச் செய்த மனிதர்கள்!

‘ARTIFICIAL’ திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அவற்றில் இடம்பெற்றுள்ள ஆச்சரியமூட்டும் நுணுக்கங்கள் குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அவை என்னென்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்!

PT WEB

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

செயற்கை நுண்ணறிவு உலகையே மாற்றி வரும் நிலையில், அதன் பின்னணியில் இருக்கும் அதிகாரப் போட்டி, தொழில்நுட்ப நிறுவனங்களின் அரசியல் மற்றும் சர்ச்சைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘ARTIFICIAL’.

இயக்குநர் லூகா குவாடாக்னினோ (Luca Guadagnino) இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் (Andrew Garfield), OpenAI நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) சாம் ஆல்ட்மேன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ARTIFICIAL

2023-ஆம் ஆண்டு OpenAI நிறுவனத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிர்வாக நெருக்கடியை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. அப்போது, சாம் ஆல்ட்மேன் திடீரென CEO பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் நிறுவனத்துக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த முடிவுக்கு ஊழியர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சில நாட்களிலேயே ஆல்ட்மேன் மீண்டும் CEO-வாகப் பொறுப்பேற்றார்.

இந்த அதிகாரப் போட்டி, நிறுவனத்தின் நிர்வாகக் குழுவுக்குள் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் AI தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், OpenAI நிறுவனத்தின் இணை நிறுவனர் இல்யா சுட்ஸ்கேவர் (Ilya Sutskever) மற்றும் சாம் ஆல்ட்மேன் இடையிலான மோதல்களும் அதில் முக்கியத்துவம் பெறுகின்றன.

மேலும், “எதிர்காலம் தவிர்க்க முடியாதது. நாடுகள் வீழ்ச்சியடையும், தொழில்துறைகள் சரியும். இந்தப் புதிய உலகிற்கு மக்களை அழைத்துச் செல்லும் பொறுப்பு நமக்குக் கிடைத்துள்ளது” என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது. இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆனால், இதையெல்லாம்விட அதிக கவனத்தைப் பெற்றிருப்பது ‘ARTIFICIAL’ திரைப்படத்தின் புதிய போஸ்டர்தான். பார்ப்பதற்கு AI மூலம் உருவாக்கப்பட்டதைப் போலவே இருக்கும் இந்தப் போஸ்டர், முழுக்க முழுக்க மனிதக் கலைஞர்களால் கையால் உருவாக்கப்பட்டது என்பது சுவாரஸ்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், சிலருக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ARTIFICIAL Movie: Trailer and Poster Reveal AI Power Struggle

இந்தப் போஸ்டரில் மிகவும் வித்தியாசமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மரத்தின் தண்டுக்குள் பினோக்கியோ (Pinocchio) போன்ற முகம் மறைந்திருக்கிறது. மரக்கிளைகளின் முனைகள் பாம்புகளாக மாறியுள்ளன. புகழ்பெற்ற கோல்டன் கேட் பாலம் (Golden Gate Bridge) கடலுக்குள் மூழ்குவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. வானத்தில் ஒரு விமானம் தலைகீழாகப் பறப்பது போலக் காட்டப்பட்டுள்ளது. ஆண்ட்ரூ கார்ஃபீல்டின் முகமும் வழக்கத்திற்கு மாறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டரில், ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் பார்வையாளர்களை நம்பிக்கையுடன் தன்னுடன் இந்தச் சிக்கலான உலகிற்குள் வருமாறு அழைப்பது போன்ற தோற்றத்தில் இருக்கிறார்.

அவர் அணிந்திருக்கும் பையிலுள்ள எழுத்துகளும் AI உருவாக்கிய படங்களில் காணப்படும் தவறான எழுத்துகளைப் போலவே அமைந்துள்ளன. இவ்வாறு, செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் படங்களில் காணப்படும் பல்வேறு நுணுக்கமான தவறுகளை மனிதக் கலைஞர்களே திட்டமிட்டு இந்தப் போஸ்டரில் உருவாக்கியுள்ளனர்.

இந்தப் போஸ்டரின் கீழ்ப்பகுதியில், “Artwork made by Humans” (மனிதர்களால் உருவாக்கப்பட்ட கலைப்படைப்பு) என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. மைக் தாம்சன் (Mike Thompson) மற்றும் கிராவில்லிஸ் இன்க். (Gravillis Inc.) இணைந்து இந்தப் போஸ்டரை உருவாக்கியுள்ளனர். இவர்கள் உருவாக்கிய ‘ARTIFICIAL’ திரைப்படத்தின் போஸ்டர் தற்போது உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

ARTIFICIAL Movie: Trailer and Poster Reveal AI Power Struggle

16 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அதிகாரப் போட்டிகளை மையமாகக் கொண்ட கதையில் நடித்துள்ளார் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட். ‘The Social Network’ திரைப்படம் Facebook நிறுவனத்தின் பின்னணியையும், அதன் இணை நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் (Mark Zuckerberg) அதிகாரப் போட்டியையும் பேசியது. தற்போது, ‘ARTIFICIAL’ திரைப்படம் AI உலகின் அதிகாரப் போட்டியைப் பேசுகிறது.

AI தொழில்நுட்பத்தை உருவாக்குவது யார் என்பது மட்டுமல்லாமல், அந்தத் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தப்போவது யார் என்ற முக்கியமான கேள்வியையும் இப்படம் எழுப்புகிறது.

AI உருவாக்கும் எதிர்காலத்தைப் பற்றிப் பேசும் இந்தத் திரைப்படத்தின் போஸ்டரையே மனிதர்கள் கையால் உருவாக்கியிருப்பது கூடுதல் முரணாகப் பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மனிதக் கட்டுப்பாட்டுக்கும் இடையிலான இந்தப் போராட்டத்தை ‘ARTIFICIAL’ திரைப்படம் எப்படித் திரையில் கொண்டுவரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது.