அஜித் கார் விபத்து PT
சினிமா

துபாய் கார் ரேஸ் | பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்து.. அணியின் நலனை கருதி அஜித் எடுத்த திடீர் முடிவு!

துபாயில் நடைபெற்றுவரும் கார் பந்தயத்திற்கான பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்திற்கு பிறகு, குறிப்பிட்ட சில ரேஸில் மட்டுமே அஜித்குமார் பங்கேற்கபோவதாகவும், சில போட்டிகளில் இருந்து விலகுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

விடாமுயற்சி, குட் பேட் அக்லி முதலிய இரண்டு திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து முடித்த நடிகர் அஜித்குமார், படப்பிடிப்பு வேலைகளை முடித்தபிறகு துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள புறப்பட்டுச்சென்றார்.

சமீபத்தில் ’அஜித்குமார் ரேஸிங்’ என்ற கார் ரேஸிங் அணியை உருவாக்கிய நடிகர் அஜித்குமார், தன்னுடைய அணியுடன் சேர்ந்து அடுத்தடுத்து நடக்கவிருக்கும் கார் பந்தயங்களில் பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியானது.

நடிகர் அஜித்

துபாயில் நடைபெற்றுவரும் 24H கார் ரேஸில் அஜித்குமார் அணியுடன் கலந்துகொண்ட அஜித்குமார் பேசுகையில், கார் பந்தயங்கள் நடைபெறும் காலங்களில் படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும், ரேஸ் இல்லாத அக்டோபர்-மார்ச் இடையேயான காலகட்டத்தில் படத்தில் நடிக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெறவிருக்கும் ரேஸில் அஜித்குமார் பங்கேற்பார் என கூறப்பட்ட நிலையில், துபாய் 24H கார் ரேஸில் அஜித்குமார் ஓட்டுநராக பங்கேற்பதில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்திருப்பதாக அணிக்குழு அறிவித்துள்ளது.

தகுதிச்சுற்றில் 7வது இடம் பெற்ற அஜித் அணி..

துபாய் 24H கார் பந்தயத்திற்கான தகுதிச்சுற்றில் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்றது. 20 அணிகள் பங்கேற்ற இந்த சுற்றில் 7வது இடத்தை பிடித்த அஜித்குமார் ரேஸிங் அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெறவிருக்கும் சுற்றுப்போட்டியில் அஜித்குமார் ஓட்டுநராக பங்கேற்பார் என கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தை சுட்டிக்காட்டி அணி நலனுக்காக ஓட்டுநராக அஜித் குறிப்பிட்ட கார் ரேஸில் களமிறங்கப்போவதில்லை என்ற முடிவை அணிக்குழு எடுத்துள்ளது.

துபாய் 24H கார் பந்தயத்திற்கான முந்தைய நாளில் பயிற்சி ஓட்டத்தில் ஈடுபட்ட அஜித், ரன்வேவில் கட்டுப்பாட்டை இழந்து துடுப்பில் பயங்கரமாக மோதிய விபத்தில் காரின் முன்பகுதி பயங்கரமாக நொறுங்கியது. நல்வாய்ப்பாக அஜித்திற்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை.

ஒரு பிரிவில் மட்டும் ஓட்டுநராக பங்கேற்கும் அஜித்குமார்..

நடந்துவரும் துபாய் 24H கார் ரேஸிலிருந்து அஜித்குமார் ஓட்டுநராக சில போட்டிகளில் விலகுவதாக அஜித்குமார் ரேஸிங் அணிக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சமீபத்தில் ஏற்பட்ட விபத்தை கருத்தில்கொண்டு அணியின் நலனையும், அஜித்குமாரின் நலனையும் முன்னிறுத்தி 24H கார் ரேஸிலிருந்து அஜித்குமார் குறிப்பிட்ட போட்டிகளில் இருந்து விலகுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது அணியின் நலனுக்காக அஜித் எடுத்த தன்னலமற்ற முடிவாகும், அவர் தொடர்ந்து அணியுடன் சேர்ந்து பயணித்து பக்கபலமாக தன்னுடைய ஆதரவை கொடுக்கவிருக்கிறார்.

இன்று நடக்கவிருக்கும் தொடரில் இரண்டு ரோல்களில் அஜித்குமார் பங்கேற்கவிருக்கிறார், போர்ஸ்ச்சே 992 கப் கார் (எண் 901) ரேஸில் அஜித்குமார் அணிக்காக உரிமையாளராகவும், போர்ஸ்ச்சே கேமன் GT4 (எண் 414) ரேஸில் ஓட்டுநராகவும் அஜித்குமார் பங்கேற்க உள்ளார். இரண்டு கார்களுக்கும் உங்களுடைய ஆதரவை கொடுங்கள்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.