அன்பில் அவன் ANBIL AVAN
சினிமா

காதல் இருக்கு… ஆக்ஷன் இருக்கு… ஆனால் விறுவிறுப்பு? | `அன்பில் அவன்’ திரை விமர்சனம்

ஒரு ரொமான்டிக் ஆக்ஷன் படமாக இதனை கொடுக்க படக்குழு முயற்சி செய்திருக்கிறது.

Johnson

சூர்யா (அசோக் செல்வன்) – இயல் (ப்ரீத்தி முகுந்தன் இருவரும் குடும்பத்தை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். திருமணத்துக்குப் பிறகு தங்களுடைய வாழ்க்கையை நிலைநிறுத்த இருவரும் கடுமையாக உழைக்கின்றனர். அதேசமயம், சொந்தமாக ஒரு ஹோம் ஸ்டே தொடங்க வேண்டும் என்பது ப்ரீத்தியின் நீண்ட நாள் ஆசையாக இருக்கிறது. மனைவியின் அந்த ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற வருத்தம் அசோக் செல்வனுக்கு இருக்கிறது. பொறுத்தது போதும் மனைவிக்காக ஒரு ரிஸ்க் எடுக்கலாம் என வங்கியில் கடன் வாங்கி, மலை பிரதேசத்தில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி, அங்கே ஹோம் ஸ்டே ஒன்றைத் தொடங்குகிறார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது போல அந்தத் தொழில் அவ்வளவு எளிதாக அமையவில்லை. ஹோம் ஸ்டேவை நடத்த விடாமல் உள்ளூர் ஆட்கள் முதல் போலீஸ், அரசியல் பின்புலம் கொண்டவர்கள் என பலரும் தொடர்ந்து குடைச்சல் கொடுக்கின்றனர். இதையெல்லாம் தாண்டி தங்களுடைய வாழ்க்கையையும், ஹோம் ஸ்டேவையும் இந்த ஜோடி எப்படி காப்பாற்றுகிறது என்பதுதான் படத்தின் கதை.

அன்பில் அவன்

ஒரு ரொமான்டிக் ஆக்ஷன் படமாக இதனை கொடுக்க படக்குழு முயற்சி செய்திருக்கிறது. கணவன் – மனைவி உறவு, காதல், அவர்களுக்குள் இருக்கும் புரிதல் என ஆரம்பக்கட்ட காட்சிகளில் அந்த உறவு நன்றாகவே நிறுவப்படுகிறது.

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் இருவரும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். குறிப்பாக, இருவருக்கும் வரும் எமோஷனலான ஒரு உரையாடல் காட்சியில் அவர்களுடைய நடிப்பு தனித்து தெரிகிறது. அந்தக் காட்சியில் கணவன் – மனைவிக்குள் இருக்கும் அன்பும், வலியும் நன்றாக வெளிப்படுகிறது. கதிரவன், மகாதேவன் என படத்தின் வில்லன்கள் நடிப்பு அளவில் பெரிய குறை ஏதும் வைக்கவில்லை.

படத்தின் இன்னொரு பலமாக கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு இருக்கிறது. மலை பிரதேச அழகையும், ஆக்ஷன் காட்சிகளையும் ஸ்டைலிஷாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். கோவிந்த் வசந்தாவின் இசையும் படத்தின் காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. அதேபோல் பினிடாவின் காஸ்ட்யூம் டிசைனுக்கும் ஒரு ஸ்பெஷல் மென்ஷன் கொடுக்கலாம். கதாபாத்திரங்களின் தோற்றத்துக்கும் படத்தின் விஷுவல் டோனுக்கும் ஏற்ற வகையில் ஆடைகள் அமைந்திருக்கின்றன.

படத்தின் மிகப்பெரிய மைனஸ், தேவையில்லாமல் கதையை இழுத்துச் சொன்னதுதான். படம் தொடங்கி காதல் காட்சிகள் முடிந்ததும் ஒரு கார் சேசிங் வருகிறது. அப்போது, ‘சரி, இனிமேல்தான் கதை வேகமெடுக்கப் போகிறது’ என்று எதிர்பார்க்க வைக்கிறது. ஆனால், அதன்பிறகும் பல பிரச்சனைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. இருந்தாலும், கதை உண்மையாகவே தொடங்காதது போன்ற உணர்வே ஏற்படுகிறது.

முக்கியமாக, ஹீரோ ஏதாவது புத்திசாலித்தனமாக செய்து இந்தப் பிரச்சனைகளை சமாளிப்பார் என்று எதிர்பார்க்கும்போது, அப்படியான தருணங்கள் பெரிய அளவில் இல்லை. இதனால் கதாநாயகனின் போராட்டமும், அவர் எடுக்கும் முடிவுகளும் கதையை கொஞ்சம் கூட சுவாரஸ்யமாக மாற்றவில்லை.

மேலும் அந்த ஊரில் இரண்டு ஆண், மற்றும் ஹீரோ என மூன்று பேர் தான் நல்லவர்கள் போலவும், மீதமுள்ள அனைவரும் தீயவர்கள் போலவும் சித்தரித்துள்ளனர். அது மிகவும் அயற்சியை உண்டாக்குகிறது.

அதேபோல், படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரங்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒருவர் எப்போதும் பெண் பித்து பிடித்தவர், இன்னொருவர் பேஸ் வாய்ஸில் பேசினாலே வில்லன் என நினைத்துக் கொண்டு பேசுபவர். படத்தின் முக்கிய வில்லன் ஒரு சொத்தின் மீது ஆசைப்படுகிறார். அது ஏன் என்பதற்கு எந்த காரணமும் இல்லை. எனவே அவர் இதில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார் என்று நமக்கு புரியவில்லை. சும்மா ஒரு குழந்தை மிட்டாய்க்கு ஆசைப்படுவது போல அந்த சொத்து வேண்டும் என அடம்பிடிக்கிறார்.

எனவே ஹீரோ – வில்லன் மோதலும் சுவாரஸ்யமாக மாறவில்லை.

குறிப்பாக, க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி மிகவும் சோர்வை ஏற்படுத்துகிறது. படத்தின் இறுதிக்கட்டத்தில் ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் ப்ளாக் எதிர்பார்க்கும் நிலையில், அந்தக் காட்சி பெரிய அளவில் ஈர்க்கவில்லை.

அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பு, ஒளிப்பதிவு, இசை ஆகியவை படத்துக்கு பலம் சேர்த்தாலும், தேவையில்லாமல் நீளும் திரைக்கதை, அழுத்தம் இல்லாத வில்லன்கள், சுவாரஸ்யமில்லாத ஆக்ஷன் காட்சிகள் படத்தின் வேகத்தை குறைக்கின்றன.

மொத்தத்தில் சொல்ல வந்த கதையை இன்னும் சுருக்கமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருந்தால், ‘அன்பில் அவன்’ ஒரு சுவாரஸ்யமான ரொமான்டிக் ஆக்ஷன் படமாக அமைந்திருக்கும்.