வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் – மீனாட்சி செளத்ரி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் திரையரங்குகளில் வசூலைக் குவித்ததோடு ஓடிடி வெளியீட்டுக்குப் பின் சமூக வலைத்தளங்களில் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
சமீப காலங்களில் திரையரங்கில் வெற்றி பெற்ற படம் ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு கடுமையாக விமர்சிக்கப்படுவதும் திரையரங்கில் பெரிதாக ஓடாத படம் ஓடிடி வெளியீட்டுக்குப் பின் “இதைப்போய் தோல்வி அடையச் செய்துவிட்டீர்களே படுபாவிகளா?” என்று சமூக ஊடகங்களில் அங்கலாய்ப்புகளைப் பெறுவதுமாக இருந்துவந்த போக்கினை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது ‘லக்கி பாஸ்கர்’.
ஒரு வெகுஜனக் கேளிக்கைத் திரைப்படமாக மட்டும் பார்த்தோமானால் இத்தகைய பரவலான பாராட்டுகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் உரிய திரைப்படம்தான் ‘லக்கி பாஸ்கர்’. ஆனால் இந்தப் பாராட்டுகளின் இரைச்சலில் இந்தப் படம் சமூகத்தில் என்ன விதமான தாக்கத்தை விளைவிக்கும் என்பது குறித்த விவாதங்கள் மழுங்கிவிடக் கூடாது.
‘லக்கி பாஸ்கர்’ படத்தின் நாயகன் பாஸ்கர் (துல்கர் சல்மான்) தனியார் வங்கியின் காசாளர். அவரது தந்தை கணக்குத் தணிக்கையாளராக இருந்தவர். ஆனாலும் அவரது குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமாகவே உள்ளது. கடன்காரர்களால் அவமானப்படுத்தப்படுகிறார். அவருக்கு நியாயமாககக் கிடைத்திருக்க வேண்டிய பதவி உயர்வு அவரது உயரதிகாரியின் சுயநலத்தின் காரணமாக வேறொருவருக்குச் செல்கிறது.. இதுபோன்ற காரணங்களால் வங்கியிடம் உள்ள பொதுமக்கள் பணத்தைக் கையாடல் செய்து அதனை கள்ள வணிகம் செய்பவருக்குக் கொடுத்து அதன் மூலம் லாபம் ஈட்டுகிறார். வசதியான நிலையை அடைகிறார்.
அடுத்ததாக வங்கியில் அவருக்குப் பதவி உயர்வு கிடைக்கிறது. அப்போது வங்கிகளுக்கிடையே கடன் கொடுக்கும் நடைமுறையைப் பயன்படுத்தி ஒரு பங்குச்சந்தை வணிகர் பெரும் ஊழல் ஒன்றைச் செய்வதைக் கண்டறிகிறார். தானும் அதில் பங்கேற்று அதன் மூலம் மேலும் பல மடங்கு லாபத்தை ஈட்டி செல்வத்தில் கொழிக்கிறார். இதனால் ஒரு பெரும் பிரச்னை வருகிறது. அப்போது இந்த ஊழலின் மூலம் பலனடைந்த வங்கி நிறுவனர் உள்பட அனைவரும் சட்டத்தின் பிடியில் சிக்குகிறார்கள்.
சரியான நேரத்தில் இந்த ஊழலிலிருந்து விலகிக்கொள்ளும் நாயகன் மீண்டும் தனது புத்திசாலித்தனத்தால் அதற்கான தண்டனையிலிருந்து தப்பிக்கிறார். தான் தவறான வழியில் சம்பாதித்த பணத்தை வைத்து வெளிநாட்டில் புதிய தொழில் தொடங்கி இன்னும் பெரிய செல்வந்தராகிறார் என்பதுடன் படம் நிறைவடைகிறது.
பொதுவாக எதிர்மறை குணாம்சங்கள் கொண்ட நாயகன்களால் ரசிகர்கள் எளிதாக ஈர்க்கப்பட்டுவிடுவார்கள். நம் சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் வாழ்வில் எப்படியாவது முன்னேறிவிட மாட்டாமோ என்கிற ஏக்கத்தில் இருப்பவர்கள். தம்மைப் போன்ற எளிய மனிதன் வாழ்வில் முன்னேறுவதற்காக சமூக விதிகளையும் சட்டத்தையும் மீறுவதையும் தனது புத்திசாலித்தனத்தால் அவற்றுக்கான தண்டனையிலிருந்து தப்பிப்பதையும் காண்பிக்கும் கதைகள் அவர்களை எளிதாக்கக் கவர்கிறது.
‘லக்கி பாஸ்கர்’ போன்ற படங்களின் வெற்றிக்கு இது முக்கியமான காரணம். ஆனால் இது போன்ற படங்கள், சாதாரண பின்னணியைக் கொண்ட குடும்பங்களிலிருந்து வரும் எளிய மனிதர்கள் சட்டத்தையும் சமூகத்தையும் ஏமாற்றுவதன் மூலமாகவே வெற்றிபெற முடியும் என்கிற தவறான சிந்தனையையும் நாம் முன்னேற வேண்டுமென்றால் சட்டத்தை மீறுவதில் தவறில்லை என்கிற மனப்பான்மையையும் ஏற்படுத்திவிடக்கூடியவை.
பெற்றோருக்கான மருத்துவம், குழந்தைகளின் கல்வி. மனைவியின் சின்ன சின்ன ஆசைகள், வாடகைவீட்டில் உள்ள சிக்கல்களிலிருந்து தப்பித்து சொந்த வீடு வாங்கும் கனவு, சுற்றத்தாரின் ஏளனம், கடன்காரர்களால் அவமதிக்கப்ப்படுவது, ஆகியவற்றிலிருந்து விடுபட சாமானியர்கள் தவறான வழியில் செல்வது ஒன்றே தீர்வு என்பது போன்ற சித்தரிப்பைத் தருகிறது.
இதுபோன்ற திரைப்படங்கள் / இணையத் தொடர்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்துவிட்டன. கடந்த ஆண்டு வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்ற ‘ஃபார்ஸி’ வெப் தொடரில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நாயகன் (ஷாஹித் கபூர்) புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த ஓவியங்களின் போலிப் பிரதிகளை வரைந்து விற்பவனாகவும் அதன் மூலம் ஈட்டும் வருவாயும் போதாத சூழலில் கள்ள நோட்டு அச்சிடத் தொடங்குவதாகவும் சித்தரித்திருந்தார்கள்.
‘திரிபுவன் மிஸ்ரா சி.ஏ டாப்பர்’ என்னும் இணையத் தொடரில் கணக்குத் தணிக்கையாளராகப் பணியாற்றும் நாயகன் தனது பணியில் சமரசம் செய்துகொள்ள மறுப்பதால் பல பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்கிறார். இதிலிருந்து தப்பிப்பதற்காக பாலியல் தொழிலைத் தேர்ந்தெடுக்கிறார் வங்கி ஊழியர். கணக்குத் தணிக்கையாளர் என ஒப்பீட்டளவில் அதிக வருவாயைத் தரும் கெளரவமான பணிகளில் இருப்போரும் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து மீள்வதற்கு தவறான வழியில் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாகச் சித்தரிக்கும் இதுபோன்ற படைப்புகள் நேர்மையாக வாழ்வது குறித்த அவநம்பிக்கையை விதைக்கின்றன.
சாதாரண மக்கள் தமது சேமிப்புகளை வங்களில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது. ஆனால் வங்கிகளைவிட ஒரு சில சதவீத அதிக வட்டி கிடைக்கும் என்பதற்காக போலி நிதி நிறுவனங்களிடம் தமது வாழ்நாள் சேமிப்புகளைப் பறிகொடுத்தவர்களின் துயரக் கதைகள் இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் நாயகன் கையாடல் செய்யும் வங்கிப் பணத்தை யாருக்கும் தெரியாமல் திருப்பி வைத்துவிடுகிறான். ஆனாலும் வங்கி ஊழியர்கள் இப்படிக் கையாடல் செய்ய வாய்ப்புள்ளது என்கிற கருத்து பார்வையாளர்களைச் சென்று சேர்கிறது. இது வங்கிகளின் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை சிதைக்கக்கூடும்.
உயர் கல்விக்கும் சிறுதொழில் தொடங்குவதற்கும் வங்கிகள் கடன்கொடுக்கின்றன. மக்கள் தமது அன்றாடச் செலவுகளிலிருந்து மிச்சம் பிடித்து வங்கிகளில் சேமித்து வைக்கும் பணத்திலிருந்துதான் இந்தக் கடன்கள் கொடுக்கப்படுகின்றன. வங்கிக் கடன் மூலம் சமூகத்தில் பல எளிய மனிதர்கள் முன்னேறியிருக்கிறார்கள். அப்படி முன்னேறியவர்கள் மீண்டும் தமது சேமிப்புகளை வங்கியில் முதலீடு செய்வார்கள்.
அந்தத் தொகை அவர்களுக்குத் தொடர்பே இல்லாத எளிய மனிதர்களுக்குக் கடனாகக் கொடுக்கப்படும். இப்படியாக சமூகம் ஒன்றிணைந்து முன்னேறுவதற்கான சுழற்சியைக் கொண்டிருக்கும் வங்கிக் கட்டமைப்பு குறித்த நேர்மறையான சித்தரிப்புகள் வெகுஜனத் திரைப்படங்களில் பெரிதாகக் பதிவுசெய்யப்படவே இல்லை என்பது வருத்தத்துக்குரியது.
சமூகத்தில் எதிர்மறையான தாக்கத்தை விளைவிக்ககூடிய இதுபோன்ற பிரச்சினைகளை முன்வைத்து ’லக்கி பாஸ்கர்’ போன்ற படங்களை விமர்சிக்கும்போது “சமூகத்தில் நடப்பதைத்தானே காட்டுகிறார்கள்? வங்கி ஊழியர்கள் வங்கிப் பணத்தைக் கையாடல் செய்வதே இல்லையா? சாமானிய மக்கள் சட்டத்தை மீறுவதேயில்லையா? அப்படி மீறுபவர்கள் சட்டத்தின் ஒட்டைகளைப் பயன்படுத்தி அவற்றிலிருந்து தப்பிப்பதே இல்லையா?” என்பது போன்ற கேள்விகளைச் சிலர் எழுப்புவார்கள்.
ஆம். சமூகத்தில் பல்வேறு அடுக்குகளில் பல்வேறு தரப்பினர் சட்டங்களை மீறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பல வழிகளில் சமூகத்தை ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். குற்றங்களைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். சினிமா போன்ற வெகுஜனப் படைப்புகளில் இதுபோன்ற குற்றங்களை மூடிமறைத்து குறைகள் அற்ற உன்னத சமூகத்தில் நாம் வாழ்வதாக போலிப் பெருமிதத்தைக் கட்டமைப்பதும் ஆபத்தானதே. சமூகத்தின் குற்றங்களும் குறைகளும் வெகுஜனக் கலை வடிவங்களில் விவாதிக்கப்படுவது அவசியமானதுதான்.
ஆனால் சட்டத்தை மீறுவதையும் குற்றங்கள் செய்வதையும் ஒரு படைப்பாளி எதற்காகக் கையில் எடுக்கிறார், யாருடைய தரப்பில் நின்று அவற்றைப் பேசுகிறார் என்பது முக்கியமானது. குற்றம்செய்பவர் அந்தக் குற்றத்தால் சமூகத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கு ஈடுகட்டிவிட்டு திருந்துவதாகவோ குற்றத்துக்கான தண்டனையைப் பெறுவதாகவோ காண்பிப்பதுதான் சமூகத்தில் நிலவும் குற்றங்கள், பிழைகள் களையப்பட வேண்டும் என்கிற அக்கறையின் வெளிப்பாடாக இருக்க முடியும்.
மாறாக உப்பைத் தின்றவன் தனது புத்திசாலித்தனத்தால் தண்ணீர் குடிக்காமலே இருப்பதை பெருமைக்குரியதாக் காண்பிப்பது ’லக்கி பாஸ்கர்’ போன்ற படங்களின் நாயகர்கள் செய்வதைப் போன்ற சமூக அநீதிதான்!.