தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலா. நாகார்ஜுனாவை திருமணம் செய்துகொண்ட பின் சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும், அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நாகார்ஜுனாவுடனான தனது வாழ்க்கையை, காதலை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர், "நாக் சார்தான் முதலில் புரபோஸ் செய்தார். அதுவரை நாங்கள் நண்பர்கள்தான் என நினைத்துக் கொண்டிருந்தேன். அங்கிருந்து ஒரு ரொமான்டிக் பார்ட்னராகவும் இணைந்து பயணித்து வருகிறோம். பெற்றோரானோம், எங்கள் பெற்றோரை கவனித்துக் கொண்டோம். நாக், அவருடைய அம்மாவுக்கு உடல்நிலை சரி இல்லாத காலத்தில், எல்லா நாளும் மதிய உணவு அம்மாவுடன்தான் சாப்பிடுவார். அவருடைய பெற்றோரை மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார். இது, ஓர் அழகான பயணம். அவருடைய வளர்ச்சியைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. நான் எது செய்தாலும் எனக்கும் ஆதரவாக இருப்பார்.
நீ இன்னும் நிறைய செய்ய வேண்டும் என என்னை உற்சாகப்படுத்துவார். இது ஓர் ஆசிர்வாதம்தான். நாங்கள் இன்னுமும் எங்களை இளமையாகவே உணர்கிறோம். உங்களுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் வரும். ஆனால் அதைவைத்து சண்டை போட்டுக்கொண்டதில்லை. அவர் என்னைப் பற்றி எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருப்பார். எனக்கு எந்த அசௌகர்யமும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். எங்காவது வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றால், கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வந்து சமைத்துக் கொடுக்க அவருக்கு மிகவும் பிடிக்கும்.
ஆரம்ப காலத்தில், ’அவர் இவ்வளவு அழகான பெண்களுடன் நடிக்கிறாரே, உங்களுக்கு Insecurityயாக இல்லையா’ என பலரும் கேட்பார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பையே எனக்கு அவர் தரவில்லை. அவருக்கு பல வயதிலும் பெண் ரசிகைகள் உண்டு. யாராவது வந்து புகைப்படம் கேட்டால் நான்தான் எடுத்துக் கொடுப்பேன். எங்கள் அன்பு அவ்வளவு உறுதியானது" எனக் கூறினார்.