அஜித் குமார் X
சினிமா

அஜித்துடன் மோதப் போகும் ‘மார்கோ’ ஹீரோ? Dare Devil update!

மோகன்லாலின் தேதிகள் கிடைக்காத நிலையில், ‘டேர் டெவில்’ வில்லன் கதாபாத்திரத்துக்கு ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனை அணுகியுள்ளது படக்குழு.

PT WEB

செய்தியாளர் - M. மீரா

அஜித் குமார் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘டேர் டெவில்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு இருவரும் மீண்டும் இணையும் இந்தப் படத்தில், முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘டேர் டெவில்’ படத்தில் அஜித்துக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட வில்லன் கதாபாத்திரத்திற்காக முதலில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Mohanlal

ஆனால், தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பில் மோகன்லால் பிஸியாக இருப்பதால், அவரால் ‘டேர் டெவில்’ படத்திற்கு தேவையான தேதிகளை ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, வில்லன் கதாபாத்திரத்திற்கு மற்றொரு பிரபல மலையாள நடிகரை படக்குழு அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

மார்கோ’ திரைப்படத்தில் அதிரடியான ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்ற உன்னி முகுந்தனிடம் தற்போது படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்துக்கு எதிராக உன்னி முகுந்தன் நடித்தால், இருவருக்கும் இடையிலான மோதல் காட்சிகள் படத்தின் முக்கிய அம்சமாக அமைய வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இருப்பினும், உன்னி முகுந்தன் படத்தில் இணைவது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Unni Mukundan

'டேர் டெவில்’ திரைப்படம் அஜித்தின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி, ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகும் முதல் படமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘வேதாளம்’ மற்றும் ‘விவேகம்’ படங்களைத் தொடர்ந்து அஜித்துடன் மீண்டும் அனிருத் ரவிச்சந்தர் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 2, 2026 அன்று தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைப்படத்தை 2027-ஆம் ஆண்டின் மத்தியில் உலகம் முழுவதும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜித்–ஆதிக் கூட்டணியின் அடுத்த படத்தில் வில்லனாக உன்னி முகுந்தன் நடிக்கிறாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.