வந்தே விட்டது அஜித்குமாரின் `குட் பேட் அக்லி’ டீசர். சேராமல் இருப்பது, அஜித் ஃபேனும்... அப்டேட்டும் என்ற கூற்றின் படி வாழ்ந்து வரும் அஜித் ரசிகர்களுக்கே அதிர்ச்சி கொடுத்திருக்கிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். முறையாக பட அப்டேட்களை கொடுப்பது தான் அந்த அதிர்ச்சி. மேலும் பொங்கலுக்கு வெளியாக இருந்து பிப்ரவரிக்கு தள்ளிப்போனது விடாமுயற்சி. அதுபோல, `குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10 ரிலீஸில் இருந்து பின் வாங்கும் என தகவல்கள் பரவிய போது, உறுதியாக ”ஏப்ரல் 10 வர்றோம் மாமே” என மாஸ் காட்டியது மைத்ரி.
ஆதிக் ரவிச்சந்திரன் ஃபேன் பாய் சம்பவமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் என்பது படம் பற்றிய அறிவிப்பு வந்ததில் இருந்தே அனைவருக்கும் தெரிந்ததே. படத்தின் புகைப்படங்கள், அதில் அஜித்தின் விதவிதமான கெட்டப் போன்றவை ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி ஏற்றின. மேலும் அஜித்குமார் கரியரில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே வருடத்தில் இரு படங்கள் வெளியாகும் படி 2025 அமைந்திருக்கிறது. 2019ல் ஜனவரியில் `விஸ்வாசம்’, ஆகஸ்டில் `நேர்கொண்ட பார்வை’ படங்கள் வெளியாகின. அதன் பின் சிங்கிள்ஸ் ஆடிக் கொண்டிருந்தார் அஜித், அதிலும் 2021 மற்றும் 2024ஐ சாமிக்கு விட்டுவிட்டார். இந்த ஆண்டில் அஜித் தரப்பில் ஓப்பனிங் இறங்கிய `விடாமுயற்சி’ சறுக்கலைக் கொடுத்தாலும், `குட் பேட் அக்லி’ படத்தை மலைபோல் நம்பி இருக்கிறார்கள் ரசிகர்கள்.
`குட் பேட் அக்லி' டீசர் அறிவிப்புகள் வந்த போது, அதில் வந்த வீட்டைப் பார்த்து, இது `மனி ஹெய்ஸ்ட்’ சீரிஸில் வந்த வீடாச்சே, என சில தியரிக்களை எழுதினர். மேலும் இதில் மூன்று அஜித் என்ற பேச்சுக்களும் இப்போது வரை இருக்கிறது. ஆதிக் இயக்கிய `த்ரிஷா இல்லன்ன நயன்தாரா’ படத்தில் ஆனந்தி பெயர் ரம்யா, AAA படத்தில் தமன்னா பெயர் ரம்யா, `பஹீரா’ படத்தில் அமைரா பெயர் ரம்யா, `மார்க் ஆண்டனி’ படத்தில் ரித்து வர்மா பெயர் ரம்யா. இப்போது `குட் பேட் அக்லி’ படத்தில் த்ரிஷா பெயரும் ரம்யா. இப்படி எல்லாம் பல ஆரய்ச்சிகளை ரசிகர்கள் ஆல்ரெடி செய்துவிட்டார்கள். சரி இப்போது வெளியாகியிருக்கும் டீசரில் என்ன இருக்கிறது?
கையில் பச்சை குத்திக் கொண்டு, ஸ்வார்டை அஜித் வாங்குவதில் ஆரம்பிக்கிறது டீசர். ”AK ஒரு ரெட் ட்ராகன்” என ஒரு கதாப்பாத்திரம் பில்டப் கொடுக்க பட்டாசாக துவங்க, அறிமுகமாகிறார் அஜித். கண்டிப்பாக இது ஒரு கேங்க்ஸ்டர் கதைதான் என்பதை டீசரில் பளிச் என சொல்லியிருக்கிறார்கள். சிறையில் இருக்கும் கேங்க்ஸ்டர் AK, தன் ரூல்ஸை தானே மீறி வெளியே வரும் சூழல் ஏற்படுகிறது. அதை சுற்றிய கதையாக இருக்கும் என நம்பலாம்.
சால்ட் அண்ட் பெப்பரில் கேங்க்ஸ்டர், சிறைக் கைதி, போலீஸ், கலர்கலராக சட்டை, பீக்கி ப்ளைண்டர்ஸ் போல லாங் கோர்ட் போட்டது, இளமையான தோற்றத்தில் பில்லா கெட்டப்பை நினைவுபடுத்தும்படியான ப்ளாக் கோர்ட் சூட் என விதவிதமான கெட்டப்பில் அஜித்தை செதுக்கி இருக்கிறார் ஆதிக்.
படத்தில் அஜித்தின் நிஜ வாழ்க்கையை குறிக்கும்படியான கனெக்ட் கொடுக்க, கதாப்பாத்திரத்திற்கு அஜித்தின் நிஜ பெயரை குறிக்கும் படி AK என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். அஜித் பிறந்த மாதமான மே-ஐ குறிக்கும் படி கார் நம்பர் ப்ளேட்டில் 05 எண் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது லேட்டஸ்ட்டாக கார் ரேஸில் கலக்கிக் கொண்டிருப்பதை பிரதிபலிக்கும்படியான ரேஸ் கார் சேசிங் காட்சி இடம்பெற்றிருக்கிறது. ரெட் படத்தில் அஜித் சொன்ன ‘அது’ என்ற பன்ச் வசனத்தை நினைவுபடுத்துவது போல, டீசரின் எண்டில் அதே டயலாகை வைத்திருக்கிறார்கள். இறுதியாக ரசிகர்களுக்கு சொல்வது போல், “மை டார்லிங்க்ஸ், மிஸ் யூ ஆல்” என்ற டயலாகை வைத்து முடித்திருக்கிறார்கள்.
கடந்த சில படங்களாகவே, ரசிகர்கள் கொண்டாடும்படியான அஜித் படம் அமையாமலே இருந்தது. அந்த இடத்தை கண்டிப்பாக குட் பேட் அக்லி பூர்த்தி செய்யும் என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. எப்படியாவது ஜெயிச்சிடு அஜித்தே என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தோல்வி அடைந்தால் விடாமுயற்சி செய்யலாம்... விடாமுயற்சியே தோல்வியடைந்தால் என்ன செய்வது என விரக்தியில் இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு, மருந்தாகவும் விருந்தாகவும் அமையுமா இந்த குட் பேட் அக்லி? பொறுத்திருந்து பார்ப்போம்...