ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் ’குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
நேர்கொண்ட பார்வை தொடங்கி விடாமுயற்சி வரை இறுக்கமான முகபாவத்துடன் அஜித்தை திரையில் பார்த்து சலித்துப்போன ரசிகர்களுக்கு, ஜாலியான கேரக்டர், இளமையான லுக், கேங்ஸ்டர் ரெட் டிராகன் என்றெல்லாம் சர்ப்ரைஸ் கொடுத்திருந்த ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருந்தார்.
மேலும் வாலி, ரெட், பில்லா, மங்காத்தா, வேதாளம் முதலிய படங்களின் ரெஃபரன்ஸை வைக்காமல், அஜித்தையே அப்படி நடிக்க வைத்திருந்தது அட்டகாசமான திரை அனுபவமாக இருந்தது. ஒரு பக்கம் இயக்குநர் ஆதிக் என்றால், மறுபக்கம் பழைய பாடல்கள், தரமான பிஜிஎம் என பட்டையை கிளப்பிய ஜிவி பிரகாஷ் தன் பங்கிற்கு சம்பவம் செய்துவிட்டார்.
ஒரு முழுத்திரைப்படமாக ரசிகர்களை கவர்ந்த குட் பேட் அக்லி வசூல் ரீதியாகவும் வெற்றித்திரைப்படமாக மாறி அசத்தியது.
இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படத்திலும் அஜித் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இருவரும் சேர்ந்து பணியாற்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை படத்தின் இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரனே கூறியுள்ளார்.
சமீபத்தில் இதுகுறித்து பேசியிருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்குமார் உடன் அடுத்தபடம் பண்ணபோறீங்கனு கேள்விபட்டோம் உண்மையா? என்ற கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது பேசுகையில், “ஆமாம் அஜித்சார் கூட இன்னொரு படம் பன்றன். அது குட் பேட் அக்லி மாதிரி கேங்ஸ்டர் படமா இருக்காது. வேறு கதைக்களமா தான் இருக்கும்” என்று பேசினார்.
இந்த வருடம் வெளிவந்த பெரிய படங்களில் வெற்றிபடம் குட் பேட் அக்லி தான் என சொல்கிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இல்லை பல பெரிய படங்கள் ஹிட் ஆயிருக்கு, அந்த வரிசைல குட் பேட் அக்லியும் இருந்தா சந்தோஷம் தான். அதைத்தவிர்த்த நல்ல கண்டண்ட் இருக்க படங்களுக்கு வரவேற்பு கிடைக்குறதும் சந்தோஷமா இருக்கு” என்று கூறினார்.
அஜித் சார் ஓட அடுத்த படத்துக்கு ஜிவி தான் இசையமைக்கிறாரா? என்ற கேள்விக்கு, “சீக்கிரம் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிய வரும்” என்று பேசினார்.