பிரபல பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர். `Hello Nandan' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர், `Love Sonia', `Super 30', `Jersey' என தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்தார். தெலுங்கில் `Sita Ramam', `Hi Nanna' போன்ற படங்கள் மூலம் பெரிய வரவேற்பை பெற்றார். சில மாதங்களாகவே இவருக்கும் நடிகர் தனுஷுக்கும் காதல் என பல பாலிவுட் ஊடகங்கள் செய்திகளை பதிவிட்டு வந்தனர். இதுவரை தனுஷ் - மிருணாள் இணைந்து எந்தப் படமும் நடிக்கவில்லை என்றாலும், சில பொது இடங்களில் இவர்கள் சந்தித்துள்ளனர். தனுஷும் பாலிவுட்டில் வளர்ந்துவரும் நட்சத்திரம் என்பதால், நடிகை மிருணாள் பிறந்தநாள் விழாவுக்கு அழைக்கப்பட்டு, அதில் கலந்து கொண்டார். மேலும் மிருணாள் நடித்த `Son of Sardaar 2' படத்தின் சிறப்பு திரையிடலிலும் கலந்து கொண்டார். இதை எல்லாம் வைத்து தனுஷுக்கும், மிருணாள் தாக்கூருக்கும் இடையில் காதல் என தகவல்கள் பரவின. இந்த நிலையில், ”நான் தனுஷ் சாரின் ரசிகை” என சமீபத்திய பேட்டியில் நடிகை மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
"தனுஷ் சாரின் `ராயன்', `மாரி', `ராஞ்சனா', `கேப்டன் மில்லர்' போன்ற படங்களை பார்த்தபின் அவரது ரசிகையாக மாறிவிட்டேன். குறிப்பாக `அசுரன்' படத்தை பலமுறைகூட பார்ப்பேன். அவர் ஒரு கலைக்கூடம் போன்றவர். ஒரு நடிகராக அவரிடமிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளன. மேலும் அவர் ஒரு பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பல விஷயங்களை செய்கிறார். `Tere Ishk Mein' படப்பிடிப்பில் அவரைச் சந்தித்தபோது நான் தயங்கியபடி `சார் Son of Sardaar படத்தின் திரையிடலில் கலந்துகொள்ள முடியுமா என்று கேட்டேன். அவர் வருவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவர் மிகவும் தன்மையானவர். அவருடன் என்றாவது இணைந்து நடிக்க வேண்டும்" என அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.