Lakshmi Menon under investigation FB
சினிமா

ஐடி ஊழியரை கடத்தி தாக்குதல்.. தலைமறைவான நடிகை லட்சுமி மேனன்.. தேடும் போலீஸ்.. நடந்தது என்ன?

ஐடி ஊழியர் உட்பட ஒரு கும்பலுக்கும், நடிகை லட்சுமி மேனன் மற்றும் நண்பர்கள் அடங்கிய கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

Uvaram P

கேரளாவில் ஐடி ஊழியர் தாக்கப்பட்ட விவகாரத்தில், பிரபல நடிகை லட்சுமி மேனனுக்கு தொடர்புடையதாக கூறப்படும் நிலையில், அவர் தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது. புகாரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், லட்சுமி மேனனை போலீஸார் தேடி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட லட்சுமி மேனன், தமிழில் கும்கி, சுந்தரபாண்டியன், வேதாளம், ரெக்க, கொம்பன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றிருக்கிறார். தமிழ் மண்ணுக்கே உரிய முகமாக பார்க்கப்பட்ட லட்சுமி மேனனை, தமிழ் ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில்தான், கேரளாவில் பார் ஒன்றில் ஏற்பட்ட தகறாரில் ஐடி ஊழியர் தாக்கப்பட்ட வழக்கில், லட்சுமி மேனன் தேடப்பட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Lakshmi Menon under investigation

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மதுபான பார் ஒன்றில், ஆகஸ்ட் 25ம் தேதி இரு தரப்புக்கு இடையே மோதல் வெடித்ததாக தெரிகிறது. ஐடி ஊழியர் உட்பட ஒரு கும்பலுக்கும், நடிகை லட்சுமி மேனன் மற்றும் நண்பர்கள் அடங்கிய கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், ஐடி ஊழியர் தனது காரில் ஏறி புறப்பட முயன்றபோது, லட்சுமி மேனனின் நண்பர்கள் அடங்கிய கும்பல், ஐடி ஊழியரை தங்கள் காருக்குள் ஏற்றி கடத்திச் சென்று தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஐடி ஊழியர், கொச்சியில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், தன்னை காரில் கடத்திச் சென்று அடித்துவிட்டு இறக்கிவிட்டுச் சென்றதாக குறிப்பட்டுள்ளார். புகாரின் பேரில் லட்சுமி மேனனின் குழுவினர் மிதுன், அனிஷ், சோனா ஆகிய மூவர் கைதாகியிருப்பதாக கேரள காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த விவகாரத்தில் நடிகை லட்சுமி மேனனுக்கும் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

Lakshmi Menon under investigation

புகார் தாரர் கொடுத்த புகாரின் பேரில் லட்சுமி மேனன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமறைவானதாக தெரிகிறது. இதனால், குற்றச்சாட்டின் அடிப்படையில் லட்சுமி மேனனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.