Anushka Shetty எக்ஸ் தளம்
சினிமா

"சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுகிறேன்" - நடிகை அனுஷ்கா ஷெட்டி அறிவிப்பு

சில வருடங்களாக பொதுவெளியில் தோன்றுவதை நிறுத்திக் கொண்ட அனுஷ்கா, சமூக வலைத்தளங்களில் இருந்தும் தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

Johnson

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. கடந்த ஜூலை மாதம் சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்தார். மேலும் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா நடித்த `காட்டி' படம் வெளியானது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் இருந்து சில காலம் விலகி இருக்கப்போவதாக அறிவித்துள்ளார் அனுஷ்கா.

இன்னும் நிறைய கதைகளுடன், நிறைய காதலுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன். அப்போதும் மகிழ்வோடு இருங்கள்.
அனுஷ்கா ஷெட்டி

"நீல ஒளியை, மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்காக விற்கிறேன். மீண்டும் உலகத்துடன் தொடர்புகொள்ளவும், ஸ்க்ரோலிங்கைத் தாண்டிய பணிகளைத் தொடரவும், நாம் அனைவரும் எங்கிருந்து துவங்கினோமோ, அங்கு இணையவும் சிறிதுகாலம் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கப் போகிறேன். இன்னும் நிறைய கதைகளுடன், நிறைய காதலுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன். அப்போதும் மகிழ்வோடு இருங்கள். அன்புடன் அனுஷ்கா" எனத் தெரிவித்துள்ளார்.

சில வருடங்களாக பொதுவெளியில் தோன்றுவதை நிறுத்திக் கொண்டதற்கு குறித்து அனுஷ்காவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "சில தனிப்பட்ட காரணங்களுக்காக இதனைச் செய்கிறேன். நான் எப்போதுமே தனிமையான நபர்தான். ஆனால், விரைவில் எல்லோரையும் நேரில் சந்திப்பேன்" என சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.

Anushka Shetty

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் இருந்தும் தற்காலிகமாக விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அடுத்ததாக அனுஷ்கா `Kathanar: The Wild Sorcerer' என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். இது அவரின் முதல் மலையாளப்படம் ஆகும்.