லியோ படம்
லியோ படம் ட்விட்டர்
சினிமா

‘லியோ’ போலி டிக்கெட்கள்.. ஆன்லைன் மூலம் விற்பனை செய்த நபர்! மதுரை திரையரங்கம் பகீர் புகார்!

Prakash J

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகை, நடிகர்கள் நடித்துள்ள ’லியோ’ திரைப்படம், அக்டோபர் 19ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், மதுரை செல்லூர் பகுதியில் கோபுரம் சினிமாஸ் திரையங்கில் 19ஆம் தேதி காலை 12.10 மணிக்குத்தான் ‘லியோ’ திரைப்படம் முதல் காட்சி திரையிடப்படவுள்ளது. ஆனால் 19ஆம் தேதி காலை 9 மணிக்கான காட்சி திரையிடப்படாத நிலையில், 9 மணி காட்சி என கூறி, சில இளைஞர்களுக்கு ஆன்லைன் மூலமாக டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Leo

இதனை வாங்கிய இளைஞர்கள் திரையரங்க நிர்வாகத்திற்கு போன் செய்து காலை 9 மணி காட்சி தொடர்பாக கேட்டபோது, அவர்கள் ‘அதுபோன்ற காட்சி எதுவும் இல்லை’ என உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள், டிக்கெட் வாங்கிய நபருக்கு போன் செய்தபோது அவர்கள் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து அவர்கள் கொடுத்த ஆன்லைன் டிக்கெட்டுகளை செக் பண்ணியபோது, அந்த டிக்கெட்டை எடிட் செய்து ’9 மணி காட்சி’ என மாற்றி போலியான டிக்கெட்டுகளை விற்பனை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து இளைஞர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மோசடியில் ஈடுபட்ட ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த ரெங்கநாதன் என்பவர் மீது திரையரங்க சார்பில் செல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் பிரபலமான கோபுரம் சினிமாஸ் திரையரங்கு பெயரில் போலியான ’லியோ’ பட டிக்கெட்டுகளை விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட பதிரானா; மீண்டு எழுவாரா? தோனியால் பட்டை தீட்டப்பட்டவர் சொதப்பியது எங்கே?