பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட பதிரானா; மீண்டு எழுவாரா? தோனியால் பட்டை தீட்டப்பட்டவர் சொதப்பியது எங்கே?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா ஓரங்கட்டப்பட்டார்.
பதிரானா
பதிரானாtwitter

இந்தியாவில் களைகட்டும் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா

10 அணிகள் பங்கேற்றுள்ள 13வது ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெறுவதுடன் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. ஐபிஎல் போட்டியையே மிஞ்சுகிற பேட்டர்கள் அதிரடி சாகசம் நிகழ்த்தி வருகின்றனர். அது ஒருபுறமிருக்க, மறுபுறம் அவர்களின் மட்டைக்குத் தீனி போடும் விதமாக பந்துவீச்சாளர்களும் மாறிவருவதுதான் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஓரங்கட்டப்பட்ட பதிரானா

இந்த நிலையில், இலங்கையின் ‘குட்டி மலிங்கா’ என்று அழைக்கப்படும் மதீஷா பதிரானா இன்றைய போட்டியில் கழட்டி விடப்பட்டுள்ளார். இவர், கடந்த ஆண்டு (2022) முதல் ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் இடம்பிடித்திருந்ததுடன், அணி கேப்டன் தோனியாலும் பட்டை தீட்டப்பட்டார். அதிலும் சமீபத்தில் (2023) நடைபெற்ற ஐபிஎல் சீசனில் இவருடைய பங்களிப்பு சிறப்பாக இருந்தது. மேலும், ஆசியக்கோப்பை (தற்போது நடைபெறும் உலகக்கோப்பைக்கு) தொடரில் பங்கேற்றிருந்த இவர், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த வயதில் 4 விக்கெட்களை வீழ்த்திய இளம்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்திருந்தார்.

பதிரானா
ஆசியக் கோப்பை: ஆரம்பமே மிரட்டல்.. தோனியால் பட்டை தீட்டப்பட்ட ’குட்டி மலிங்கா’ புதிய சாதனை!

முதல் போட்டியில்  ரன்களை வாரி வழங்கிய பதிரானா

இச்சூழலில், நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் இலங்கை அணியில் தேர்வு செய்யப்பட்டு முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். இதில், கடந்த அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற பதிரானா, 10 ஓவர்கள் வீசி, 95 ரன்களை வாரி வழங்கியிருந்தார். மேலும், இந்தப் போட்டியில் ஒரே ஓவரில் மட்டும் 26 ரன்களையும் வழங்கியிருந்தார். இதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை வழங்கிய இலங்கை வீரராக பதிரானா மோசமான சாதனை படைத்தார். இதுகுறித்து அவர்மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. குறிப்பாக இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அவர்மீது, தமக்கு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்திருந்தார்.

2வது போட்டியிலும் ரன்களை வழங்கிய மதீஷா

எனினும், அதைப் பெரிதும் கருத்தில் கொள்ளாது இலங்கை அணி கேப்டன் தசூன் ஷனகா, அவருக்கு மீண்டும் பாகிஸ்தான் போட்டியில் ஒரு வாய்ப்பை வழங்கினார். அதாவது, கடந்த அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்துவீசிய அவர், 9 ஓவர்கள் வீசி 90 ரன்களை வழங்கியிருந்தார். இதனால், அவர் மீண்டும் விமர்சனத்துக்குள்ளானார். மேலும் இந்த இரண்டு போட்டிகளிலும் (தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான்) இலங்கை அணி, 49 ரன்களை எக்ஸ்ட்ராவாக விட்டுக் கொடுத்துள்ளது.

இலங்கைக்கு கவலையளித்த பதிரானா பந்துவீச்சு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் போட்டியில் 23 ரன்களையும் (1 லெக் பைஸ், 21 வைடு, 1 நோ-பால்) பாகிஸ்தான் அணிக்கு எதிராக 26 ரன்களையும் (1 நோ-பால், 25 வைடு) எக்ஸ்ட்ராஸாகக் கொடுத்துள்ளது. இதில்,மதீஷா பதிரானா மட்டும் இரண்டு போட்டிகளிலும் 31 ரன்களை எக்ஸ்ட்ராகவாக வழங்கியுள்ளார். குறிப்பாக, முதல் இலங்கை அணி, இரண்டு போட்டிகளிலும் தோற்பதற்கு பதிரானாவின் பந்துவீச்சும் ஒரு காரணமாகப் பேசப்பட்டது. அவருடைய இந்த பந்துவீச்சு இலங்கைக்குக் கவலையளிக்கும் விஷயமாக மாறியிருக்கிறது.

பதிரானா
WorldCup2023: தோனியால் பட்டை தீட்டப்பட்ட பதிரானா படைத்த மோசமான சாதனை!

பதிரானாவுக்குத் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்த தோனி!

பெரும்பாலும், கிரிக்கெட்டைப் பொறுத்தவரை முதல் போட்டியில் அதிக ரன்களை வாரி வழங்கும் பந்துவீச்சாளர்கள் அடுத்த போட்டியில் இடம்பெற மாட்டார்கள். இதை நிறைய ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் பார்த்திருக்கலாம். ஆனால், இந்த விஷயத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அதற்கு நேர்மாறானவர். தொடர்ந்து, அந்தப் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பை வழங்குவார். அவருடைய திறமையை நிரூபிப்பதற்கு வாய்ப்பை உருவாக்கித் தருவார். ஐபிஎல் போட்டியில்கூட இதேபோன்று, பதிரானா ஒருசில போட்டிகளில் ரன்களை வாரி வழங்கியபோதும், அவருக்கு தோனி வாய்ப்பு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிரானாவின் பந்துவீச்சு குறித்துப் பேசிய தோனி

அதேநேரத்தில், அவரது பந்துவீச்சு குறித்து அப்போது பேசிய அவர், ’பதிரனா போன்ற வித்தியாசமான ஆக்‌ஷன் கொண்ட பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது எப்போதுமே சவால்தான். இப்படியான ஆக்‌ஷன் கொண்ட பதிரானா, அதிகம் கிரிக்கெட் விளையாடக்கூடாது. குறிப்பாக, ரெட் பால் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதைத் தவிர்க்க வேண்டும். 50 ஓவர் கிரிக்கெட்டையும் முடிந்தளவுக்குக் குறைவாகவே அவர் ஆட வேண்டும். இலங்கை நிர்வாகம் பெரிய ஐசிசி தொடர்களுக்காக மட்டும் அவரைப் பாதுகாக்க வேண்டும். இப்போது அவர் ஏற்படுத்தும் தாக்கத்தை எப்போதுமே அவரால் ஏற்படுத்தமுடியும். அவர் நிச்சயம் இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்கப்போகிறார்’ எனப் பேசியிருந்தார்.

இதையும் படிக்க:

தோனி பேசியதை விமர்சிக்கும் ஜாம்பவான்கள்

தோனி கூறியதைத்தான் தற்போது பலரும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், தோனியின் ஆலோசனையையும் யாரும் சீரியஸாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. அதாவது, தோனியின் கருத்தைப் பலரும் தவறாகப் புரிந்துகொண்டுள்ளதாகவே தெரிகிறது.

’தோனி சொன்னதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம்’

இதுகுறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட், ’தோனி என்ன சொன்னார் என எனக்குத் தெரியாது. அதைப் பெரிதாக நாங்கள் பொருட்படுத்தப்போவதும் இல்லை. பதிரானா மிகவும் இளமையான அபாரத்திறமை கொண்ட ஒரு பந்துவீச்சாளர். 50 ஓவர் கிரிக்கெட்டில் அவருக்கான இடம் இருக்கவே செய்கிறது. அதை அவருக்கு மறுப்பது சரியானதாக இருக்காது. இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அவர்கள் என்ன செய்வார்கள் என்பது உலகத்துக்குத் தெரியும்’ எனத் தெரிவித்திருந்தார்.

பதிரானாவை மறைமுகமாகச் சாடிய ஷனகா

அதேநேரத்தில் இலங்கை அணியின் கேப்டனாக இருந்த (இன்றைய போட்டியில் குசால் மெண்டிஸ்) இலங்கை கேப்டன் தசூன் ஷனகா, ’அதிக ரன்களை எக்ஸ்ட்ராஸில் விட்டுக்கொடுப்பது கவலையளிப்பதாக இருக்கிறது. அளவுக்கு அதிகமாக எக்ஸ்ட்ராஸில் ரன்களை விட்டுக்கொடுப்பது சரியல்ல’ என யார் பெயரையும் குறிப்பிடாமல் மறைமுகமாகச் சாடியிருந்தார். ஆனால், அவர் சாடியிருந்தது பதிரானாவைதான். காரணம், அந்த இரண்டு போட்டிகளிலும் அதிக ரன்களை வாரி வழங்கிவர் பதிரானா.

இதையும் படிக்க: தமிழ்நாடு ஃபார்முலா வழியில்.. தெலங்கானாவில் போட்டி போட்டு அறிவிப்புகளை வெளியிடும் காங். Vs பிஆர்எஸ்!

பதிரானா குறித்து இலங்கை நினைப்பது என்ன?

எனினும், பதிரனா ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆடத் தகுதியற்றவர் என்கிறரீதியில் தோனி கருத்து கூறவில்லை. அவரைப் போன்ற திறமை கொண்ட ஒரு வீரர் தொடர்ந்து பந்துவீசுவது உடலளவில் அவருக்கு உகந்ததாக இருக்காது. அவரைப் போற்றிப் பாதுகாத்து ஐசிசி தொடர்கள் போன்ற முக்கிய தொடர்களில் மட்டும் களமிறக்கலாம் என்பதே அவரது ஆலோசனை. இதையறிந்தே, பதிரனாவை நன்கு பயன்படுத்திக்கொண்டார், தோனி. ஆனால், இலங்கை அணி, அவரை ஒரு சராசரி வேகப்பந்து வீச்சாளராகவே நினைக்கிறது. மேலும், அவருக்கு இது அறிமுக உலகக்கோப்பை. தவிர, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடிய அனுபவம் இல்லாதவர். இதனால் இலங்கை அணியில் இத்தனை பிரச்னைகளும் குழப்பங்களும்.

ஒருநாள் போட்டியில் பதிரானாவின் பங்களிப்பு என்ன?

இன்னும் சொல்லப்போனால், பதிரானா இதுபோன்ற தொடர்களுக்குத் தயாராகி வர, இலங்கை அணி இன்னும் நிறைய நேரம் கொடுத்திருக்க வேண்டும் என்பதே பலருடைய கருத்தாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் டி20 போட்டிகளில் அதிகபட்சம் ஒரு பந்துவீச்சாளர் 4 ஓவர்கள் மட்டுமே வீசுகிறார். ஆனால், ஒருநாள் போட்டியில் அப்படியில்லை. 10 ஓவர்கள் வரை வீச வேண்டியுள்ளது. ஆக, அதற்கு ஏற்றப்படி வீசுவதுடன் ரன்களையும் கட்டுப்படுத்த வேண்டும்; விக்கெட்டையும் கைப்பற்ற வேண்டும். இதற்கெல்லாம் போதிய அனுபவம் வேண்டும் என்பதே ஜாம்பவான்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படிக்க: “ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைப்பதற்கு முக்கிய காரணம் விராட் கோலி தான்” - உலக மேடையில் புகழாரம்!

வருங்காலங்களில் மீண்டும் எழுவாரா, பதிரானா?

இதையெல்லாம் கருத்தில் கொண்டிருக்கும் இலங்கை அணி, இன்றைய போட்டியில் (அக்.16) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெளியில் உட்கார வைத்துள்ளது. எனினும், அவர் இரண்டு போட்டிகளில் சொதப்பியிருப்பதை வைத்து, மொத்தமாக அவரை புறம்தள்ளிவிடுவதும் சரியாக இருக்காது என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

தோனி சொன்னதுபோல இலங்கை கிரிக்கெட்டுக்குக் கிடைத்த மிகப்பெரிய சொத்தான பதிரானாவை, வீணாக்கிவிடாமல், ஒருநாள் போட்டிகளில் அவருடைய திறமையை முறையாகச் செப்பனிட்டு வார்த்தெடுத்தால், வருங்காலங்களில் அவரும் வரலாற்றில் இடம்பிடிப்பார்.

இதையும் படிக்க: ’லாகூரில் நடந்தது நினைவில்லையா?’ விமர்சனத்தை எழுப்பிய ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்.. வலுக்கும் கண்டனங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com