சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி, காஜல் அகர்வால், சூரி உள்ளிட்டோர் நடித்து 2010-ல் வெளியான படம் ‘நான் மகான் அல்ல’. மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த இந்தப் படம், கார்த்தியின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக்க மாறியது. இந்தப் படத்தில் சூரி, கார்த்தியின் நண்பராக ‘ரவி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் சூரியை நோக்கிச் சொல்லப்படும் ஒரு வசனம் இப்போது ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.
சூரி நடிப்பில் `மண்டாடி' படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் சூரி ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மக்களிடம் பெரிய வரவேற்பு பெற்றுள்ளார். இந்நிலையில்தான் ‘நான் மகான் அல்ல’ படத்தில் வரும் அந்த வசனம் ட்ரெண்ட் செய்யப்பட்டுள்ளது. அப்போது சூரி, இன்று இருப்பது போல முன்னணி ஹீரோ கிடையாது. ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கவனம் பெற்றிருந்த அவர், தொடர்ந்து காமெடி மற்றும் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ‘நான் மகான் அல்ல’ படத்திலும் கார்த்தியின் நண்பராக வரும் சூரியின் காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
அந்தப் படத்தில், திருமணம் ஒன்றில் கார்த்தி மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து திருமண ஜோடியுடன் இணைந்து புகைப்படம் எடுப்பது போல ஒரு காட்சி இடம்பெற்றது. அதில், தன் அருகில் ரவி பாத்திரத்தில் நடித்த சூரியை அழைத்து நிற்க வைப்பார். உடனே சூரி "என்ன விட்டுட்டு ஒரு போட்டோகூட எடுக்க மாட்றியே மாப்ள" எனச் சொல்வார். உடனே கார்த்தி "இல்லடா நீ என் பக்கத்துல நின்னா நான் கொஞ்சம் பிரைட்டாக தெரிவேன்" என சொல்வார். அப்போது அந்தக் காட்சி வெறும் ஒரு நகைச்சுவை என அனைவரும் எடுத்துக் கொண்டாலும், இன்று அது சூரியின் அசாத்திய உழைப்புக்கான சான்றாக மாறி இருக்கிறது
’விடுதலை’ மூலம் நாயகனாக அறிமுகமாகி, ’கொட்டுக்காளி’ படத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி, ’கருடன்’ மூலம் கமர்ஷியல் ஹீரோவாக மாறி, ’மாமன்’ படத்தின் மூலம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கிறார். இப்போது ’கருடன்’ படம் மூலம் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாறி இருக்கிறார். இதில் இன்னொரு தற்செயல் என்ன என்றால், ‘நான் மகான் அல்ல’ படத்தில் சூரியை கிண்டல் செய்யும் கார்த்தி நடித்த `சர்தார் 2' படத்துடன் சூரியின் `மண்டாடி' வெளியாகி நல்ல வவேற்பைப் பெற்றிருக்கிறது என இணையத்தில் பலரும் பேசி வருகின்றனர்.