அமீர்கான் - சிவகார்த்திகேயன் web
சினிமா

”உங்க முதல் இந்தி படம் என் தயாரிப்பில்தான்..” - சிவகார்த்திகேயனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமீர்கான்!

அமீர்கான் தயாரிப்பில் முதல் இந்தி படத்தில் நடிக்கவிருப்பதாக சிவகார்த்திகேயன் வெளிப்படுத்தியுள்ளார்.

Rishan Vengai

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இருவரின் அசத்தலான நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அமரன். மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளிவந்த திரைப்படத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு ரசிகர்களிடையே அதிகப்படியான பாராட்டை பெற்றது.

அமரன்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் ரூ.333 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது.

இந்நிலையில், தன்னுடைய அடுத்தபடமாக இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், தன்னுடைய நேரடி இந்தி படம் குறித்து பேசியுள்ளார்.

அமீர் கான் தயாரிப்பில் முதல் இந்தி படம்..

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடைய நேரடி இந்தி படம் குறித்து வெளிவந்த செய்திகளுக்கு பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், ”நடுவில் ஒரு இந்தி படம் நடிப்பது குறித்து பேசியது உண்மை தான். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை எதிர்பார்த்ததை போல முடியவில்லை. ஆனால், இந்தியில் நேரடியாக படம் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். நான் இதை எங்கேயும் இதுவரை சொன்னதில்லை, நான் சமீபத்தில் அமீர்கான் சாரை சிலமுறை நேரில் சந்தித்தேன்.

அப்போது உங்களுடைய முதல் இந்தி படம் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் தான் இருக்கவேண்டும் என்று அமீர்கான் கூறினார். உங்களிடம் ஏதேனும் கதைகள் இருந்தால் கூட கொடுங்கள் அதை பண்ணலாம் எனவும் கூறினார்.

அப்போது நான் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்தேன், சில பணிகள் இருக்கிறது, அதை முடித்துவிட்டு சரியான கதை வரும்போது எடுத்து வருகிறேன் என்று அமீர்கானிடம் கூறியிருக்கிறேன்.

என் முதல் படம் அவருடைய தயாரிப்பில் இருக்க வேண்டும் என்பதில் அவரும் ஆர்வமாக இருக்கிறார். நேரம் வரும்போது நிச்சயம் இந்தி படம் நடிப்பேன், அதை சரியான கதை தான் தீர்வு செய்யும்” என்று தெரிவித்தார்.