நடிகர் சயீப் அலிகான் எக்ஸ் தளம்
சினிமா

நடிகர் சயீப் அலிகானுக்கு கத்திக்குத்து | சந்தேக நபர் ம.பியில் கைது!

பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் குத்தப்பட்ட வழக்கில், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Prakash J

பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், கடந்த ஜனவரி 16ஆம் தேதி அதிகாலை நபர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டார். அவர், இந்தத் தாக்குதலில் 6 முறை குத்தப்பட்டார். அலிகானைக் குத்திவிட்டு தப்பியோடிய அந்த நபரை போலீசார் தீவிரமாய்த் தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு துப்புகள் அடிப்படையில் மும்பை காவல் துறையின் 30 தனிப்படைகள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றன. மறுபுறம் காயமடைந்த சயீப் அலிகான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலை வேகமான முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் அவர் 2 அல்லது 3 நாட்களில் வீடு திரும்பலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் அவசரசிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வழக்கமான உணவுகளை உண்டு, நடப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

saif ali khan

இதற்கிடையே, சயீப் அலிகானின் மனைவியும் நடிகையுமான கரீனா கபூர், அந்த நபர் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார் எனவும் திறந்தவெளியிலிருந்த நகைகளை அந்த நபர் எடுக்க வில்லை என்றும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார். இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், போலீசார் வெளியிட்டிருந்த புகைப்படம் மற்றும் தகவல்கள் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவர் மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 31 வயதான அவர், ஆகாஷ் கைலாஷ் கன்னோஜியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை-ஹவுரா ஞானேஸ்வரி விரைவு ரயிலில் அவர் பயணித்தபோது இரயில்வே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, இந்தச் சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. அதில் உண்மையில்லை எனத் தெரிவித்திருக்கும் போலீசார், அவர் கான் வீட்டிற்கு வந்த வேலை செய்த தச்சர் எனத் தெரிவித்துள்ளனர்.