பிரபல பாலிவுட் நடிகர் சயீஃப் அலிகான், கடந்த ஜனவரி 16ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் தன் வீட்டிலேயே மர்ம நபர் ஒருவரால் 6 முறை கத்தியால் குத்தப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கத்திக்குத்துக்குப்பின் மீட்கப்பட்ட சயீஃப் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவர், தற்போது காயத்திலிருந்து உடல் நலம் தேறியிருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், மும்பை லீலாவதி மருத்துவமனையில் இருந்து நடிகர் சயீஃப் அலிகான், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். என்றாலும், அவர் ஒருவாரத்திற்கு வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் எனவும், தொற்று எதுவும் ஏற்படாதவாறு உடல்நிலையைக் கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதேநேரத்தில், அவர், விரைவில் பழையபடி நடமாடுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே அவரைக் காணும் நோக்கில் அவரது ரசிகர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
முன்னதாக, நடிகர் சயீஃப் அலிகான் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக தப்பியோடிய மர் நபரை போலீசார் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி, மும்பை போலீசாரால் வங்கதேச நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச நாட்டவர் என்றும், கடந்த சில மாதங்களாக மும்பையில் வசித்து வந்துள்ளார் என்றும், முதற்கட்டமாக அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என தெரிய வந்துள்ளதாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.