களைகட்டிய புத்தாண்டு.. குஷியில் மக்கள்.. வாழ்த்து தெரிவிக்கும் தலைவர்கள்.. என புத்தாண்டு தொடங்கிய நொடியில் இருந்தே பரப்பரப்பாகவும் ஆரவாரமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தனர். அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்தும் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
பொங்கல், தீபாவளி மற்றும் புத்தாண்டு தினங்களில், தன்னுடைய ரசிகர்களை ரஜினி சந்தித்து வாழ்த்து கூறுவது வழக்கமாகும். இதற்காகவே, சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டின் முன் ரஜினிகாந்தை சந்திக்க அவரது ரசிகர்கள் அதிகாலையிலேயே வருகை தருவார்கள்.. இன்னும் சிலர், ரஜினியின் வாழ்த்தை பெறுவதற்காக, நள்ளிரவு முதலே காத்துக் கிடப்பார்கள்.
இந்நிலையில், தன் வீட்டின் முன் குவிந்து கிடந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். ரஜினியை கண்ட ரசிகர்கள் ஆரவாரத்துடன் பதில் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
முன்னதாக, இன்று காலையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில் ரசிகர்களுக்கு பாட்ஷா படத்தின் வசனத்தை குறிப்பிட்டு வாழ்த்துகளை பதிவு செய்திருந்தார் ரஜினிகாந்த்.
அதில் , “ நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள். #Welcome2025" என தெரிவித்திருந்தார்.