நடிகர் ராஜேஷ், சத்யன் எக்ஸ் தளம்
சினிமா

”காலை 6 மணிக்கெல்லாம்.. அந்த 2 மணி நேர தாமதம்தான் காரணம்” - நடிகர் ராஜேஷ் சகோதரர் உருக்கம்!

”காலை 6 மணிக்கெல்லாம் அண்ணன் என்னை அழைத்திருந்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பேன்” நடிகர் ராஜேஷ் தம்பி சத்யன் தெரிவித்துள்ளார்.

Prakash J

45 ஆண்டுகளாக சினிமாவில் கோலோச்சி வந்த நடிகர் ராஜேஷ், இன்று தன்னுடைய 75ஆவது வயதில் காலமானார். அவருடைய இறப்பு, தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ”காலை 6 மணிக்கெல்லாம் அண்ணன் என்னை அழைத்திருந்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பேன்” நடிகர் ராஜேஷ் தம்பி சத்யன் தெரிவித்துள்ளார்.

ராஜேஷ்

இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “காலை 6 மணிக்கெல்லாம் அண்ணன் என்னை அழைத்திருந்தால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருப்பேன். 6 - 6..30 மணிக்கு வந்தவர், 8 மணி வரை சித்தா டாக்டர் பேசிக்கொண்டே இருந்துவிட்டார். காலை எட்டு மணிக்குப் பிறகுதான் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். காலை 6 மணிக்கு அண்ணன் அசெளகரியமாக உணர்ந்த பிறகு, தாமதம் செய்ததுதான் பெரிய பிரச்னையாகிவிட்டது. நெஞ்சு வலிப்பதாக அண்ணன் கூறவில்லை. இரவு முழுவதும் தூங்கவில்லை. மூச்சுவிடவில்லை என்றுதான் கூறினார். பைபாஸ் அறுவைசிகிச்சை செய்திருந்ததால் அடிக்கடி அண்ணன் மருத்துவமனைக்குச் சென்று வருவார்” எனத் தெரிவித்துள்ளார்.

சில மணி நேர கால தாமதம் என்பது ஒரு உயிரை பறிக்கும் அளவுக்கு சென்றுள்ளது நேரத்தின் முக்கியத்துவத்தை காட்டுகிறது.