கராத்தே மாஸ்டர் ஹூசைனி முகநூல்
சினிமா

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல கராத்தே மாஸ்டர் ஹூசைனி... உயிரிழந்த பரிதாபம்!

உயிரிழந்த நடிகரும் , கராத்தே மாஸ்டருமான ஹூசைனி.. சோகத்தில் திரை மற்றும் கலைத்துறையினர்!

ஜெனிட்டா ரோஸ்லின்

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கராத்தே ஹூசைனி நேற்று நள்ளிரவு உயிரிழந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

1986 ஆம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் திடைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஷிஹான் ஹூசைனியின் சொந்த ஊர் மதுரைதான். இவர் கராத்தே மாஸ்டரும் கூட. புன்னகை மன்னன் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும், விஜய்யின் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படம்தான் இவருக்கு சினிமாவில் திருப்பு முனையை ஏற்படுத்தியது என்று கூறலாம்.

இந்த படங்கள் மட்டும் அல்லாது, ’காத்து வாக்குல ரெண்டு காதல் ‘ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல, 400 க்கும் மேற்பட்டோருக்கு வில் வித்தை, கராத்தே பயிற்றுவிக்கும் பயிற்சியாளராகவும் இருந்துவந்துள்ளார்.

இந்தநிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு, தான் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தனக்கு தினமும் 2 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது எனவும் கூறி வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார்.. இந்த பதிவு காண்போரை கண் கலங்க வைத்தது.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவருக்கு பல திரைப்பிரபலங்கள் ஆறுதல் கூறி வந்தனர்.மேலும், அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியில் இருந்து சிகிச்சைக்காக ரூ.5. லட்சம் வழங்கப்பட்டது.

மேலும், சில தினங்களுக்கு முன்னர் தான், இறந்த பிறகு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சி பணிக்காக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தனமாக அளிப்பதாக கூறியிருந்தார். மேலும், தனது கராத்தே வில்வித்தை மாணவர்களிடம் தனது இதயத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இப்படியான சூழலில், மார்ச் 25 ஆம் தேதி அதிகாலை 1.40 மணியளவில் நடிகரும் கராத்தே மாஸ்டருமான ஹுசைனி (வயது 60) சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவரது உடல் தற்போது அஞ்சலி செலுத்துவதற்காக பெசன்ட் நகரில் உள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இவரது குடும்பத்தினருக்கு ரசிகர்கள் திரை மற்றும் கலைத்துறையினர் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை கூறிவருகின்றனர்.