நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’தக் லைஃப்’ படத்தின் புரமோஷன் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், “எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால் தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி கன்னடம். அது, தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்” எனத் தெரிவித்திருந்தார். கமலின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தின் பேனர்களைக் கிழித்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் குரல் கொடுத்திருந்தனர். ஆனால், இந்த விஷயத்தில் விளக்கமளித்த கமல், ”அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது” எனத் தெரிவித்திருந்தார். எனினும், ”இந்த விஷயத்தில் கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் ’தக் லைஃப்’ படம் வெளியாகாது” என கன்னட பிரபலங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தபின்பு, செய்தியாளர்களிடம் பேசிய கமல், “இது ஒரு ஜனநாயக நாடு. நான் சட்டம் மற்றும் நீதியை நம்புகிறேன். கர்நாடகா மீதான என் அன்பு பரிசுத்தமானது. கேரளா மீதான என் அன்பு பரிசுத்தமானது. ஆந்திரா மீதான என் அன்பு பரிசுத்தமானது. அஜெண்டாவுடன் செயல்படும் சிலரைத் தவிர யாருக்கும் என் மீது ஐயம் வராது. நான் இதற்கு முன்பும் மிரட்டப்பட்டிருக்கிறேன். தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டிருப்பேன். தவறு செய்யவில்லை என்றால், மன்னிப்பு கேட்கமாட்டேன். இப்படித்தான் என் வாழ்வியல் இருந்திருக்கிறது. " என்று தெரிவித்துள்ளார்.