அட்டக்கத்தி, நந்தலாலா, முகமூடி, மதயானைக்கூட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் கலையரசன். மெட்ராஸ் திரைப்படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் நடித்ததற்கு பிறகு மக்களிடம் அதிகப்படியான வரவேற்பை பெற்றார். அதற்கு பிறகு அதே கண்கள் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தாலும் கபாலி, டார்லிங், சார்பட்டா பரம்பரை, வாழை உள்ளிட்ட திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்தார்.
இந்நிலையில் தற்போது மெட்ராஸ்காரன் என்ற திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்திருக்கும் கலையரசன், தமிழ் சினிமே மல்டி ஸ்டாரர் என்ற ஹெல்தியான நிலையில் இல்லை, இங்கு ஒருமுறை துணை கதாபாத்திரத்தில் நடித்தால் தொடர்ந்து அதேபோலான பாத்திரங்களில் மட்டுமே நடிக்க அழைக்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.
வள்ளி மோகன் தாஸ் இயக்கத்தில் ஷான் நிகம், கலையரசன், நிகாரிகா கொனிடாலா, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘மெட்ராஸ்காரன்’. இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரும் நிலையில், செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கலையரசன், “நான் ஒரு விசயத்தை இங்க சொல்ல விரும்புறன். இனிமே நிறைய கதாபாத்திரங்களில் நான் நடிக்கப்போவதில்லை. தமிழ்சினிமாவில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டால், உதாரணமாக ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் எல்லா படத்திலும் அதே மாதிரி கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க அழைக்கிறார்கள். ஒரு படத்திற்கான கதை எழுதும்போதே சாவு என வந்துவிட்டால் என்னுடை பெயரை எழுதிவிடுவார்கள் போல” என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டாரர் என்ற ஒன்று இல்லை என விமர்சித்த அவர், ‘நானும் நிறைய கதாபாத்திரங்களில் நடிக்க தயார், உதாரணமாக கேரளாவில் நிறைய கதாபாத்திரங்களில் நடித்தால், அடுத்த படங்களில் அவர்கள் கதாநாயகர்களாகவும் நடிப்பார்கள். ஆனால் இங்கு அந்த ஹெல்தியான நிலை இல்லை. அதனால் அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்கவே விரும்புகிறேன்” என்று கூறினார்.