பாட்டில் ராதா திரைப்பட நிகழ்வில் பேசிய இயக்குநர் மிஷ்கின், தகாத வார்த்தைகளைக் குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மிஷ்கினின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 2K love story திரைப்பட நிகழ்வில் நடிகர் அருள்தாஸ் பேசியுள்ளார். அவர் கூறுகையில், “சமீபத்தில் பாட்டில் ராதா நிகழ்வில் மிஷ்கின் பேசியது அநியாயமாகவும் அக்கிரமமாகவும் இருந்தது. அம்மாதிரியெல்லாம் பேசவேண்டும் என்று அவசியல் இல்லை. இயக்குநர் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பது கிடையாதுதானே. அந்த வீடியோ பார்த்தேன். நமக்கு தலைகுனிவாக இருந்தது. இந்திய சினிமாவில் மிக மதிக்கக்கூடிய இடத்தில் இருக்கிறது தமிழ்சினிமா. தமிழ் சினிமா இயக்குநர்கள் மட்டுமல்ல தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் மதிக்கக்கூடிய இடத்தில் இருக்கிறார்கள்.
பிரசாத் லேப் மேடை பல ஜாம்பவான்களைப் பார்த்த மேடை. அந்தமாதிரி மேடையில் அப்படி பேசுகிறார். நீங்கள் வெளியில் பேசிக்கொள்ளுங்கள். மேடை நாகரீகம் என்ற ஒன்று இல்லையா. அவ்வளவு புத்தகங்களைப் படித்துள்ளேன் என்கிறீர்கள்; உலக படங்களைப் பார்த்துள்ளேன் என்கிறீர்கள். என்ன அறிவு இருக்கிறது உங்களுக்கு. குறைந்தபட்சமாவது ஒரு நாகரீகம் வேண்டாமா? தம்பி என யாரை வேண்டுமானாலும் கூப்பிடலாம். ஆனால், அவர் நம்மை அண்ணனாக நினைக்க வேண்டும். மிஷ்கின் இன்று மட்டும் பேசுகிறார் என நினைக்கவில்லை. தொடர்ச்சியாக பல மேடைகளில் பேசிக்கொண்டு வருகிறார்.
பாலாவை அவன் தான் பாலா என்பது, இளையராஜாவை அவன்தான் இளையராஜா என்பது. யார்ரா நீ.. நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா தமிழ் சினிமாவில். போலி அறிவாளி என்றுதான் சொல்ல வேண்டும். அன்று மேடையில் இருந்தவர்கள் எல்லாம் அற்புதமான அறிவான, நமது மண் சார்ந்த கதைகளை மட்டுமே படம் எடுக்கும் இயக்குநர்கள்.
தமிழ் சினிமா இயக்குநர்களை பெரிதும் மதிக்கக்கூடிய ஒருவன் நான். ஆனால், அந்த மேடை எனக்கு மிக அறுவறுப்பாக இருந்தது. ஏற்கனவே சினிமாகாரர்கள் என்றால் பார்க்கும் பார்வையே வேறுமாதிரிதான் இருக்கிறது. நம்மை நாமளே தாழ்த்தி அசிங்கப்பட வேண்டாம்” என்றார்.