புஷ்பா பட இயக்குநர் வீட்டில் ரெய்டு.. காரணம் இதுதான்!
சுகுமார் இயக்கி நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் கடந்த ஆண்டு டிச.5ஆம் தேதி வெளியானது. இப்படம், வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே இப்படத்தின் பிரீமியர் காட்சியின்போது ஐதராபாத் தியேட்டர் வாசல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது மகனும் மருத்துவமனையில் கோமா நிலையில் உள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் தியேட்டர் நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து உயிரிழந்த பெண்ணுக்கு ஆதரவாக இருப்பதாக அறிவித்தார். மேலும் அல்லு அர்ஜுன் குடும்பத்தின் சார்பில் 1 கோடி ரூபாயும், புஷ்பா பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சார்பில் தலா 50 லட்சம் ரூபாயும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. என்றாலும், இவ்விவகாரம் தெலங்கானா அரசியல் வரை விஸ்வரூபமெடுத்தது. இதையடுத்து, மாநில முதல்வர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்.
இந்த நிலையில், புஷ்பா 2 தயாரிப்பாளர்கள் தில் ராஜு, ரவிசங்கர், நவீன் யெர்னேனி ஆகியோரின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து இயக்குநர் சுகுமார் வீட்டிலும் ஐ.டி. துறையினர் சோதனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இயக்குநர் சுகுமார் விமான நிலையத்தில் இருந்த நிலையில், அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து அப்படியே வீட்டுக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. அதிகாலையில் தொடங்கி பல மணி நேரம்வரை இந்த சோதனை நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்றாலும், அவர்கள் வீட்டில் ஏன் சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்து ஐ.டி. துறையினர் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. அதேநேரத்தில், ரெய்டுக்கும் படத்தின் வசூலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்கிறரீதியில் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, மாநில அமைச்சர்கள் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 50 கோடி ரூபாய் தரவேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். புஷ்பா 2, இதுவரை 1,700 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், வருமான வரித்துறையினர் இந்த அதிரடி சோதனையை நடத்துகின்றனரா அல்லது இது பழிவாங்கும் முயற்சியா என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன.