ajith kumar எக்ஸ் தளம்
சினிமா

கரூர் விவகாரம் | “விஜய்க்கு நல்லதே நினைத்திருக்கிறேன்” - நடிகர் அஜித்!

தனது முந்தைய பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

PT WEB

தனது முந்தைய பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவம் தொடர்பாக தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ள கருத்துகளை, அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஆங்கில ஊடகத்திற்கு தாம் அளித்த பேட்டியானது, ஒருசிலரால் அவர்களது தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும், சிலர் அஜித் - விஜய் இடையிலான மோதல்போல ஆக்கிவிட்டனர் என்றும் கூறியுள்ளார். தான் எப்போதும் ஓட்டு கேட்டு வரமாட்டேன் எனவும், தனக்கென்று எந்த திட்டமோ, உள்நோக்கமோ கிடையாது எனவும் அஜித் கூறியுள்ளார். கரூரில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது, அது நீண்டநாட்களாக நடக்க காத்திருந்த விபத்து என்று கூறியுள்ள அஜித், ரசிகர்களையோ, தொண்டர்களையோ குறை சொல்ல என்ன உரிமை இருக்கிறது எனவும் வினவியுள்ளார். நானும் குற்றத்திற்கு பொறுப்பானவன்தான் என்று குறிப்பிட்டுள்ள அஜித், மக்களும், அரசும் ஒன்றுக்கு ஒன்று பிணைந்ததாக இருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

அஜித் குமார்

சுரண்டப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பதாக சில போலி சமூக ஆர்வலர்கள் உள்ளதாகவும், போலிகளால் மூளைச்சலவை ஆகாமல் இருக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அஜித் கூறியுள்ளார். எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது என்றும், விஜய்க்கு நல்லதே நினைத்திருக்கிறேன், வாழ்த்தி இருக்கிறேன் எனவும் அஜித் குறிப்பிட்டுள்ளார். தன்னைப் பிடிக்காதவர்கள் எப்போதுமே தன்னை வேற்று மொழிக்காரன் என்று கூறி வருவதாகவும், ஒருநாள் அவர்கள் உரத்த குரலில், தன்னை தமிழன் என்று அழைப்பார்கள் எனவும் அஜித் தெரிவித்துள்ளார். கார் ரேஸில் சாதித்து இந்த மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன் எனவும், இந்தப் பயணத்தில் தனது உயிரே போனாலும் பரவாயில்லை எனவும் அஜித் தெரிவித்துள்ளார்.