Ajith Car Racing X Page
சினிமா

‘தல போல வருமா...’ Mass Look-ல் நடிகர் அஜித்.. கார் ரேஸிங் டீம் அறிமுகம்.. வெளியான அசத்தல் வீடியோ!

நடிகர் அஜித் குமார் ரேஸிங், அணியின் சார்பில் பந்தயத்தில் போட்டியிடும் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ராம் பிரசாத்

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்து வருகிறார். சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்ட அஜித், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Ajith Car Racing

2003ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசிய பி.எம்.டப்ள்யூ சாம்பியன்ஷிப், 2010ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் உள்ளிட்ட சில போட்டிகளில் கலந்து கொண்டார். இதன்பிறகு, எந்த கார் பந்தயத்திலும் பங்கேற்காமல் இருந்த அஜித், நீண்ட இடைவெளிக்கு பிறகு விரைவில் நடக்கவிருக்கும் ஐரோப்பியன் ரேஸிங்கில் பங்கேற்கவுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார்.

இதையடுத்து "அஜித்குமார் ரேஸிங்" என்ற பெயரில் புதிய கார் பந்தய அணியை அஜித் உருவாக்கிய நிலையில், அணியின் சார்பாக பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பேபியன் என்பவர் ஐரோப்பியா சீரிஸ் 993 GT3 பிரிவில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

Ajith Car Racing

அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார் என்றும், அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

24H துபாய் 2025, ஐரோப்பியன் 24H, PORSCHE 992 GT3 CUP ஆகிய கார் பந்தயங்களில் அஜித் மற்றும் அவரது அணி போட்டியிடுகிறது. இதில் PORSCHE 992 GT3 கார் பந்தயத்திற்காக கடந்த மாதம் சோதனை ஓட்டம் மேற்கொண்டார் அஜித்.

Ajith Car Racing

அப்போது அவரது ஹெல்மேட் மற்றும் காரில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை லோகோ இடம் பெற்றிருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவ, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் அஜித்குமார் ரேஸிங் அணியின் சார்பில், பந்தயத்தில் போட்டியிடும் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் PORSCHE 992 GT3 CUP காரை அவர் பயன்படுத்த உள்ளார். அஜித்குமார் என்கிற பெயர் பதிக்கப்பட்டு, நெருப்பு போல் பந்தயத்திற்கு தயாராகி நிற்கும் இந்த காரின் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.