நடிகர் ஆரி x page
சினிமா

”SK-கிட்ட பணம் இருக்கு.. விளம்பரம் செய்வாரு” - ஆதங்கப்பட்ட நடிகர் ஆரி!

நடிகர் ஆரி நடித்துள்ள ஃபோர்த் ஃப்ளோர் படம் கடந்த மாதம் 27ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இந்த படத்துக்கு சரியாக தியேட்டர்கள் கிடைக்காத நிலையில் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Prakash J

நடிகர் ஆரி நடித்துள்ள ஃபோர்த் ஃப்ளோர் படம் கடந்த மாதம் 27ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இந்த படத்துக்கு சரியாக தியேட்டர்கள் கிடைக்காத நிலையில் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தனது நடிப்பில் வெளியான ’போர்த் ப்ளோர்’ படத்தை தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பார்த்த நடிகர் ஆரி, பழனி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, அவர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேசியபோது, “அதிக விளம்பரம் செய்யும் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. மற்ற படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. தயாரிப்புச் செலவைவிட விளம்பரம் செய்ய வேண்டிய செலவு அதிகரித்துள்ளது. புதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ளனர். அவர்களிடம் இதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். புதிய தயாரிப்பாளர்கள் வரத் தயங்குகின்றனர். நல்ல கதைகள் இல்லை என்கின்றனர். நல்ல கதையோடு படம் எடுத்து வந்தால் திரையரங்கம் தருவதில்லை. தமிழகத்தில் தமிழர் எடுத்த படத்தை வெளியிட முடியவில்லை என்பது அவமானம். தற்போது அதற்காக சண்டை போட்டு வருகிறோம்.

நடிகர் ஆரி

என்ன காரணம் என கேட்டால், ’இந்த படத்துக்கு நீங்கள் செய்த விளம்பரம் போதவில்லை. தாய்கிழவி படம் பாருங்கள். எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள், அதனால் கொடுக்கிறோம்’ என தெரிவித்தார்கள். தாய்கிழவி படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன். அவரிடம் விளம்பரம் செய்யும் அளவுக்கு சக்தி இருக்கு, பொருளாதார வசதி இருக்கு, விளம்பரம் செய்வதற்கான யுக்தி இருக்கு. ஆனால் என்னோட படத்தின் தயாரிப்பாளர் திருப்பூரில் இருந்து சொந்தமாக தொழில் செய்து சம்பாதித்து ஒரு நல்ல படம் எடுக்க வேண்டும் என நினைத்தவர். ஒரு படத்துக்கு என்ன செலவு செய்ய முடியுமோ, அந்த சக்திக்குட்பட்டு செய்கின்றனர். ஆனால் எதை தீர்மானித்து இவர்கள் தியேட்டர் கொடுக்கிறார்கள் என்பதில் குழப்பம் நிலவுகிறது. விளம்பரத்திற்கென இவ்வளவு தொகை செய்யவேண்டும் என நிர்ணயிக்கவாவது செய்ய வேண்டும். ’ஏன் ரிலீஸ் பண்ண மாட்டேன்’ என்பதற்கான காரணத்தையாவது தெரிவியுங்கள். கெஞ்சி, கெஞ்சி திரைப்படத்தை வெளியிட வேண்டியதாக உள்ளது. இதுபோன்ற விசயங்கள் தவிர்க்கப்பட்டால், நல்ல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் வருவர்” என்றார்.