கல்பனாவுக்கு (சாத்விகா வீரவள்ளி) சிறு வயது முதலே விண்வெளி வீராங்கனை ஆக வேண்டும் என ஆசை. ஆனால் சாலை வசதிகள்கூட இல்லாத ஒரு கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறக்கும் கல்பனாவுக்கு16 வயதிலேயே கிருஷ்ணாவுடன் (துல்கர் சல்மான்) திருமணம் செய்து வைக்கப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு தனது மனைவியின் வயதையும், அவருடைய லட்சியத்தையும் அறிந்து கொள்ளும் கிருஷ்ணா, கல்பனாவின் கனவுகளுக்கு தடையாக இருக்காமல் அவருக்கு உறுதுணையாக நிற்கிறார். விண்வெளி நோக்கிய கல்பனாவின் பயணத்தில் அவர் சந்திக்கும் தடைகள் என்ன? அவற்றை தாண்டி கனவு நனவானதா? இதெல்லாம் தான் Aakasamlo Oka Tara.
கடந்த வாரம் வெளியான இந்த தெலுங்குப் படம் ஆந்திராவில் மிகப்பெரிய ஹிட். இந்தப் படத்தின் பெரிய பலமே உணர்ச்சிகரமான ஒரு படமாக இதனை கொடுத்திருப்பது தான். கிராமத்திலிருந்து கிளம்பிய ஒரு பெண் விண்வெளி வீராங்கனையாக முயலுகிறாள் என்ற மிகப்பெரிய விஷயத்தை நம்பும் வகையில் கொடுக்க எமோஷன்களை அழகாக பயன்படுத்தி இருக்கிறார் இயக்குநர் பவன் சதினேனி.
நடிகர்களின் நடிப்பு பொறுத்தவரை மிகப்பெரிய பலமே துல்கர் சல்மான் மற்றும் சாத்விகா வீரவல்லியின் நடிப்புதான். வழக்கமான கதாநாயகனுக்கான முக்கியத்துவத்தை எதிர்பார்க்காமல், கதாநாயகியின் கனவுக்கு உறுதுணையாக நிற்கும் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மனைவிக்காக போராடுவது, அவள் கனவுகளை நனவாக்க தவிப்பது, தானே அவளுக்கு தடையாகி விடுவோமோ என பயப்படுவது என பல இடங்களில் அசத்துகிறார்.
அறிமுக நடிகையான சாத்விகா வீரவல்லி, கல்பனா கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்துள்ளார். சிறுவயதிலிருந்தே கனவுகளுடன் வாழும் பெண்ணாகவும், தோல்விகளால் துவண்டு மீண்டும் எழ முயற்சிக்கும் இளம்பெண்ணாகவும் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். இரண்டாம் பாதியில் வரும் ஸ்ருதிஹாசன் பாத்திரம் படத்துக்கு கூடுதல் எனர்ஜி கொடுக்கிறது. ருஹானி சர்மா மற்றும் நாசர் உள்ளிட்டோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு படத்தின் மற்றொரு பலம். கிராமத்துச் சூழல் முதல் விண்வெளி சார்ந்த காட்சிகள் வரை அழகாகப் படமாக்கியுள்ளார். இயக்குநர் பவன் சதினேனி, பெண்களின் கல்வி, திருமண வாழ்க்கையில் புரிதல், கனவுகளை அடைவதற்கான போராட்டம் எனப் பல விஷயங்களை இப்படத்தின் மூலம் பேசியுள்ளது பாராட்ட வேண்டியது.
இந்தப் படத்தின் குறைகள் என சொல்வது என்றால் படத்தின் முதல் பாதி சற்று மெதுவாக நகர்கிறது. கல்பனாவின் வாழ்க்கைச் சூழலையும் அவரது கனவுகளையும் நிறுவுவதற்காக அதிக நேரம் எடுத்துக்கொள்வதால், சில காட்சிகள் திரும்ப திரும்ப வருகின்றன. படம் சுவாரஸ்யமாக இருந்தாலும் திருப்பங்கள் அத்தனையும் எளிதில் கணிக்க முடிவதாகவே இருக்கின்றன.
பெண்களின் கனவுகளுக்கு குடும்பமும் வாழ்க்கைத் துணையும் எவ்வளவு முக்கியமான ஆதரவாக இருக்க முடியும் என்பதை அழுத்தமாகப் பேசும் திரைப்படம் AOT. உணர்வுப்பூர்வமான காதல், ஊக்கம் தரும் கதைகள் மற்றும் நல்ல நடிப்பை விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல திரையரங்க அனுபவமாக அமையும்.