மதுரையில் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தை நினைவூட்டும் வகையில் 230-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் பொம்மைகளுடன் அமைக்கப்பட்ட நவராத்திரி கொலு, சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
செய்தியாளர் - M. மீரா
நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்படும் நிலையில், மதுரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் அமைத்துள்ள சிறப்புக் கொலு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரஜினிகாந்தின் 50 ஆண்டுகாலத் திரைப்பயணத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கொலு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை திருநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ரஜினி கோயிலில் இந்தக் கொலு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நவராத்திரி கொலுவில் கடவுள்களின் சிலைகள் மற்றும் புராணக் கதாபாத்திரங்கள் இடம்பெறும். ஆனால், இங்கு ரஜினிகாந்தின் திரைப்படக் கதாபாத்திரங்களை வைத்து வித்தியாசமான முறையில் கொலு அமைக்கப்பட்டுள்ளது.
230-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், பொம்மைகள்!
ரஜினிகாந்த் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பின் காரணமாக, அவரது ரசிகர் ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக நவராத்திரி விழாவின்போது இந்தச் சிறப்புக் கொலுவை அமைத்து வருகிறார்.
இந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ள கொலுவில் 230-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் ரஜினிகாந்தின் பல்வேறு தோற்றங்களைப் பிரதிபலிக்கும் பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. அவரது நீண்டகாலத் திரைப்பயணத்தை ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் இவை அழகாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 1975-ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படம் தொடங்கி, முள்ளும் மலரும், பாட்ஷா, படையப்பா, சிவாஜி, எந்திரன் உள்ளிட்ட பல படங்களில் ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
மேலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் ஜெயிலர் 2 உள்ளிட்ட படங்களுடன் தொடர்புடைய தோற்றங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ரஜினிகாந்தின் வெவ்வேறு காலகட்டத் தோற்றங்களையும் கதாபாத்திரங்களையும் ஒரே இடத்தில் காண முடிவதால், இந்தக் கொலு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. மதுரை மக்களிடம் மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் இதைப் பார்க்கும் ரஜினி ரசிகர்களிடமும் இந்த முயற்சி வரவேற்பைப் பெற்று வருகிறது.