இந்திய சினிமாவின் மாமேதை சத்யஜித் ரே, இயக்குநர் மட்டுமல்ல; எழுத்தாளர், ஓவியர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் உலகம் வியந்த கலைஞர். ‘பதேர்பாஞ்சாலி’ மூலம் வங்கத்தின் சிறுவன் அபுவின் வாழ்க்கையை உலகுக்கு அறிமுகப்படுத்தி, கான் விழாவில் இந்தியாவுக்கு முதல் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத் தந்தார். மனித உணர்வுகளை ஆழமாக சித்தரித்த அவரது படங்கள் இன்றும் சினிமா வரலாற்றின் ஒளிக்கோப்புகள்.
புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரேயின் படங்களைப் பார்க்காமல் இருப்பது, உலகில் இருந்துகொண்டு சூரியனையும் சந்திரனையும் பார்க்காமல் இருப்பதற்குச் சமம் என்றார் உலகப்புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசாவா.
திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், ஓவியர், இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமையால் இந்தியாவிற்குப் பெருமைசேர்த்தவர் சத்யஜித் ரே. வங்கத்தின் ஒருசாமானிய சிறுவன் 'அபு'வின் வாழ்க்கையைப் பேசிய ‘பதேர்பாஞ்சாலி’, உலகத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. 1956-ஆம்ஆண்டு கான் திரைப்பட விழாவில் இந்தப்படம் வென்ற சிறந்த மனித ஆவணம் விருது, இந்திய சினிமாவிற்குக் கிடைத்த முதல் சர்வதேச அங்கீகாரம்.
தாகூரின் நாவலில் உருவான ‘சாருலதா’, ஜமீன்தாரின் வீழ்ச்சியைப் பேசும்‘ஜல்சாகர்’, பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பேசிய ‘மகாநகர்’ மற்றும் ஒரு நட்சத்திரத்தின் நிஜ முகத்தைக் காட்டிய ‘நாயக்’ என அவர் செதுக்கிய ஒவ்வொரு படமும் உலக சினிமாவரலாற்றின் பொக்கிஷங்கள்.
வெறும் கருப்பு-வெள்ளை பிம்பங்களை மட்டுமல்ல, மனித உணர்வுகளின் ஆழமான நிறங்களை உலகிற்கு அறிமுகப்படுத்திய சத்யஜித் ரேயின்பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.