”புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே” என்னும் டிஎம்எஸ் –இன் குரல் எங்கோ கேட்கும்போது நம் மனக்கண்ணில் விரிவது கண்ணனின் திருவுருவமாக மட்டுமிருக்காது. அப்பாடலுக்கு உயிர் தந்த இசைமேதை மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதன் மற்றும் கவியரசர் கண்ணதாசனின் முகங்களும் சேர்ந்தே தோன்றும். தமிழ்த் திரையுலகில் இணைந்தே பயணித்து ஓர் இசைப் புரட்சியே நடத்திய இவ்விரு ஜாம்பவான்களின் பிறந்த நாள் இன்று. ஒன்றாகவே பணி செய்து நட்பு பாராட்டி, ஒப்பற்ற பல பாடல்களை மானுடத்துக்குத் தந்த இவர்களின் பிறந்த நாள் ஒரே நாளில் அமைந்தது காலத்தின் ஆச்சர்யங்களுள் ஒன்று.
தமிழ்த் திரையுலகில் இணைந்தே பயணித்து ஓர் இசைப் புரட்சியே நடத்திய இவ்விரு ஜாம்பவான்களின் பிறந்த நாள் இன்று.
நாடகக் கம்பெனியில் ஆபீஸ் பையனாக வாழ்க்கையைத் தொடங்கி, இசைமேதை எஸ்.எம் சுப்பையாவால் அடையாளம் காணப்பட்டு பின் மெல்லிசை மன்னராக கோலோச்சியவர் எம்.எஸ்.வி. கவியரசர் கண்ணதாசனுக்கும், இவருக்கும் இருந்த நட்பு உலகறிந்தது. கிருஷ்ணன் அர்ஜுனனுக்கிடையில் இருந்த நட்பு போன்றது எனலாம். ஆனால் இது இரு கிருஷ்ணர்களுக்கிடையிலான நட்பு. இருவருக்கும் வயது வித்தியாசமென்றாலும் புரிந்துணர்வு மிக அதிகம். அந்த புரிதல்தான், ஈடிணையில்லா காலத்தினாலழியா பாடல்களை நமக்குக் கொடுத்தது.
பகவான் கண்ணன் மீது கொண்ட அதீத ஈடுபாட்டால் தன் பெயரை ’கண்ணதாசன்’ என மாற்றிக் கொண்ட கவியரசர், தான் படைத்த ’வனவாசம்’, ’மனவாசம்’, ’அர்த்தமுள்ள இந்துமதம்’ புத்தகங்களில் எல்லாம் கண்ணனுக்கு அடுத்து அதிகமாக உச்சரித்த பெயர் விஸ்வநாதன். அதேபோல, எம்.எஸ் விஸ்வநாதன் அவர்களின் எல்லாப் பேட்டிகளிலும் தவறாது இடம்பெறும் பெயர் கண்ணதாசன். அப்படி இருவருக்குள்ளான நட்பு காலத்தினால் ஏற்பட்ட தங்கப் பிணைப்பு.
தான் படைத்த ’வனவாசம்’, ’மனவாசம்’, ’அர்த்தமுள்ள இந்துமதம்’ புத்தகங்களில் எல்லாம் கண்ணனுக்கு அடுத்து அதிகமாக உச்சரித்த பெயர் விஸ்வநாதன். அதேபோல, எம்.எஸ் விஸ்வநாதன் அவர்களின் எல்லாப் பேட்டிகளிலும் தவறாது இடம்பெறும் பெயர் கண்ணதாசன்.
இருவரும் இணைந்து படைத்த ’கிருஷ்ண கானங்கள்’ தமிழக பக்தி உலகிற்கு கிடைத்தப் பொக்கிஷம் என்றால், அது மிகையல்ல. கண்ணனே நேரில் இறங்கி வந்தது போன்ற உணர்வை அப்பாடல்கள் தருவதாக இன்றும் சிலாகிப்பவர்கள் உண்டு. காலம் கடந்தும் இன்னும் காற்றில் வாழ்ந்துகொண்டே இருப்பது தானே அவர்களது அரும்இசை. கிருஷ்ண கானங்களின் மற்றொரு பெருமை தமிழின் புகழ்பெற்ற பாடகர்கள் எட்டுப் பேரின் குரல்களில் ஒலித்து எட்டுவிதமான சுவையை வெளிப்படுத்தியது தான்.
கண்ணதாசன் தனது பேட்டிகளில் ’வியட்நாம் வீடு’ திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசைக்கு அவர் எழுதிய, ‘பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா’ என்ற தொடக்க வரியை எம்.எஸ்.வியை நினைத்தே எழுதியதாகப் பகிர்ந்திருந்தார். மெல்லிசை மன்னர் பிறந்தது பாலக்காட்டில் என்பது நமக்கு தெரியும்தானே. இசை ஜாம்பவானாக இருந்தாலும் யாரையும் புண்படுத்தாமல் அனைவரையும் அரவணைக்கும் அன்பர், குழந்தைபோல பேச்சு மட்டுமல்ல, குழந்தை மனமும் கொண்டவர் எம்.எஸ்.வி. அதனால் அவரை பாலக்காட்டு அப்பாவி ராஜாவாக கண்ணதாசர் எழுதியதில் முழுவதுமாக உடன்படலாம்தானே? ’ராகங்கள் பதினாறு உருவான வரலாறு’ என்ற பாடல் வரிகளும் அவரிடம் இருந்து தோன்றியதுதான் என்றார் கண்ணதாசன்.
குழந்தைபோல பேச்சு மட்டுமல்ல, குழந்தை மனமும் கொண்டவர் எம்.எஸ்.வி. அதனால் அவரை பாலக்காட்டு அப்பாவி ராஜாவாக கண்ணதாசர்....
தமிழ்த் திரையிசைப் பாடல்களுள் யாராலும் மறுக்க முடியாத, மறக்கவியலாத சாகாவரம் பெற்ற ஓர் பாடல் ’கர்ணன்’ படத்தில் வெளியான 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடல். எம்.எஸ்.வி மற்றும் கண்ணதாசன் இணைந்து உருவாக்கிய இந்த இசைப் பேரதிசயம், வெண்கலக் குரலோன் சீர்காழி கோவிந்தராஜனால் குரல் பெற்று, இதை கேட்கும் எவரையும் ஆன்மாவுக்குள் நுழைந்து அசைத்துப் பார்த்துவிடும் என்பதுதான் நிதர்சனம்.
’ஆண்டவன் கட்டளை’ படத்தில் இடம்பெற்ற 'ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு' என்னும் பாடல், 'வருவான் வடிவேலன்' படத்தில் இடம்பெற்ற 'பத்துமலை திரு முத்துக் குமரணை பார்த்து களித்திருப்போம்’ எனும் பாடல், 'மூன்று தெய்வங்கள்’ படத்தில் வரும் ’திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா’ எனும் பாடல், ’பாவமன்னிப்பு’ படத்தில் இடம்பெற்ற, 'எல்லோரும் கொண்டாடுவோம்' பாடல் என இவர்கள் இருவரும் இணைந்து கொடுத்த அற்புதமான பக்தி மணம் கமழும் பாடல்கள் ஏராளம் ஏராளம்.
இவர்களின் காம்போ, ஒரு மெகா ஹிட் காம்போ என்றாலும், அது மிகையல்ல. ஒரு சில தருணங்களில் ஒரே மெட்டுக்கு இரு விதமான பாடல்களை மெல்லிசை மன்னர் தந்ததுமுண்டு. அதற்கேற்ற வரிகளைக் கொடுத்ததன் மூலம் அப்பாடல்களை கண்ணதாசன் அப்படியே வேறுபடுத்திக் காட்டியிருப்பார். ’பாகப்பிரிவினை’ படத்தில் வரும் ’தாழையாம் பூமுடிச்சு’ பாடலும், ’காதலிக்க நேரமில்லை’ படத்தில் வரும் ’காதலிக்க நேரமில்லை’ என்ற பாடலும் ஒரே மெட்டைக் கொண்டவை. ஒன்று மாற்றுத்திறனாளி ஒருவர் தன்மீது குறைபட்டுக் கொள்வதும் அவரை மணந்த காதல் மனைவி அவரை ஆற்றுப்படுத்தும் வகையிலும் உள்ள பாடல். மற்றொன்று மாறுவேடத்தில் சென்று தன் காதலியிடம் கலாட்டா செய்யும் கதாநாயகனின் குத்தாட்டப் பாடல். இரண்டுக்கும் ஒரே மெட்டுதான். ஆனால் பாடல் வரிகளில் அற்புதமான வேறுபாடு காட்டியிருப்பார் கண்ணதாசன். ( அட ஆமா இரண்டும் ஒரே மெட்டு எனத் தோன்றுகிறதா?)
ஒரு சில தருணங்களில் ஒரே மெட்டுக்கு இரு விதமான பாடல்களை மெல்லிசை மன்னர் தந்ததுமுண்டு. அதற்கேற்ற வரிகளைக் கொடுத்ததன் மூலம் அப்பாடல்களை கண்ணதாசன் அப்படியே வேறுபடுத்திக் காட்டியிருப்பார்.
இப்படி ஆயிரக்கணக்கான பாடல்களைத் திரையுலத்துக்கும், தமிழ் மக்களுக்கும் அளித்த இவ்விரு மன்னர்களுக்கும் ஒரே நாளில் பிறந்த பேரு பெற்றவர்கள். ஒன்றாகவே பயணித்த வாழ்வு பெற்றவர்கள். இப்பிறவியில் இவர்களின் படைப்புகள் ருசிக்கக் கிடைத்த நாமும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே.