90களின் பிரபல நடிகை சிவரஞ்சனியின் மகள் மேதா, தெலுங்கு சினிமாவில் ‘Mythri In Love’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம் காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திர தம்பதி நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகை சிவரஞ்சனி (ஊஹா). ஸ்ரீகாந்த் தெலுங்கு சினிமாவில் மிகப்பிரபலம், தமிழில் விஜய் நடித்த `வாரிசு' படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்தார். ஆனால் அவரது மனைவி சிவரஞ்சனி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரபலம். `சின்ன மாப்பிள்ளை', `கலைஞன்', `ராஜதுரை', `அரண்மனை காவலன்', `வண்டிச்சோலை சின்னராசு' எனப் பல படங்களில் நடித்தார். 90களின் இறுதிக்கு பின் சினிமாவிலிருந்து விலகி குடும்பத்தை கவனித்து வருகிறார்.
இந்த தம்பதியின் வீட்டிலிருந்து முதலில் அவரது மகன் ரோஷன் `Nirmala Convent' என்ற தெலுங்குப் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்போது அதே வீட்டிலிருந்து ஒரு ஹீரோயின் சினிமாவில் நுழைகிறார். அது ஸ்ரீகாந்த் - சிவரஞ்சனியின் மகளான மேதா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘Mythri In Love’ படத்தின் மூலம் அவர் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
இப்படத்தில் மேதாவுக்கு ஜோடியாக ஜெய் ஜஸ்தி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இளைஞர்களின் காதல், உறவுகளுக்கு இடையிலான உணர்வுகள், நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணியைக் கலந்து உருவாகும் காதல் நகைச்சுவைப் படமாக இது இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘30 Weds 21’, ‘Middle Bench Ravi’ உள்ளிட்ட இணையத் தொடர்களை இயக்கிய பிரித்வி வனம் இப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். ‘Miss Shetty Mr Polishetty’, ‘Andhra King Taluka’ படங்களுடன் தொடர்புடைய மகேஷ் பாபு பி., இப்படத்தின் உருவாக்கத்தில் பங்கேற்கிறார். பாடலாசிரியர் ராமஜோகய்யா சாஸ்திரியின் மகன் சாய் ஹர்ஷா இசையமைக்கிறார்.
நடிகர் ஸ்ரீகாந்த் – சிவரஞ்சனி தம்பதியின் மகன் ரோஷன் ஏற்கெனவே தெலுங்குப் படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது மகள் மேதாவும் கதாநாயகியாக அறிமுகமாவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.