\
வித்யா பாலன் - ரஜினிகாந்த்
வித்யா பாலன் - ரஜினிகாந்த்jailer 2 super show

ரஜினி சார் முன்னாடி.. நான் அப்படி பயந்ததில்ல! கை எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு! - வித்யா பாலன்

ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை பாலிவுட் நடிகை வித்யா பாலன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
Published on: 
Summary

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் வித்யா பாலன் நடித்த அனுபவத்தை பகிர்ந்தார். ரஜினி முன்னிலையில் சிகரெட் பிடிக்கும் காட்சியில் கை நடுங்கியதாகவும், தமிழ் வசனங்களை பேச மெனக்கெட்டதாகவும் கூறினார். நெல்சனின் இயக்கம் மற்றும் ரஜினியின் நடிப்பு தான் படத்தில் சேர காரணம் என அவர் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஜெயிலர் 2. கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான 'ஜெயிலர்' படத்தின் இரண்டாவது பாகமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ரஜினி உடன் சேர்ந்து எஸ் ஜே சூர்யா, ரம்யா கிருஷ்ணன், சுராஜ், வித்யாபாலன் என பல திரைநட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இன்னும் 2 நாட்களில் அக்டோபர் 15ஆம் தேதி படம் வெளியாகவிருக்கும் நிலையில், இப்படத்தின் முன்பதிவு தொடங்கி 30 கோடிக்குமேல் சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக இசை வெளியீட்டு விழா நடத்தப்படாமல், அதற்கு பதிலாக சிறப்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதில் திரைப்படத்தில் நடித்த அனைவரும் கலந்துகொண்டு பேசியிருந்தனர். அப்போது ரஜினிகாந்த் சாருடன் இணைந்து நடித்தது குறித்து நடிகை வித்யாபாலன் பகிர்ந்துகொண்டார்.

ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்ததற்கான முதல் காரணம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “முதலில் இது ரஜினிசார் திரைப்படம், அதுதான் முக்கிய காரணம். பின்பு நெல்சன் சார் திரைப்படம், நிஜமாகவே அவருடைய இயக்கமும் எனக்கு பிடிக்கும். எனக்கு தமிழ் எளிதாக பேசவராது என்பதால் நீளமான வசனங்கள் பேச நிறைய மெனக்கெடல் செய்யவேண்டியிருந்தது. இதை சொல்லியே ஆகவேண்டும், எனக்கு ஒருநாள் 3.30 மணிக்கு ஃபிளைட் இருந்தது, அதற்குள் என்னுடைய ஷூட் முடிந்துவிடும் என்று கூறினார்கள். ஆனால் நெல்சன் சார் என்னை அழைத்ததே 3.30 மணிக்கு தான், அப்போது நான் டயலாக் எல்லாம் ரெடியாக வைத்துக்கொண்டு சீக்கிரம் முடித்துவிடலாம் என நினைத்திருந்தேன். ஆனால் டயலாக்க நான் மாத்திட்டன்னு ஒன்றரை பக்கத்துக்கு ஒரு டயலாக் பேப்பரை தந்தார், நான் ஷாக் ஆகிட்டேன். என்னுடைய விமானம் தாமதாக வந்ததால் பின்னர் அதே ஃபிளைட்டில் என்னால் செல்லமுடிந்தது.

மற்றொரு விசயம் படத்தில் சிகரெட் பிடித்தது. எனக்கு அந்தப் பழக்கம் இல்லை என்பதால், முதல்முறை சிகரெட் பிடித்தபோது எனக்கு கண்கள் எல்லாம் ஒருமாதிரி ஆகிடுச்சு. ரஜினிசார் கூட எடுக்கப்பட்ட ஷாட் அது, அவருக்கு முன்னாடி அதை பண்ணும்போது எனக்கு கைஎல்லாம் நடுங்க ஆரம்பிடுச்சு, கண்ணெல்லாம் ஒரு மாதிரி மயக்கம் வர மாதிரி ஆகிடுச்சு. இதுக்கு முன்னாடி நான் இப்படி பயந்தது கிடையாது. என்ன மீறி என் கை நடுங்குது. அப்புறம் ஒருவழியாக அதை நடித்து முடித்தேன்” என கூறினார்.

வித்யா பாலன் - ரஜினிகாந்த்
”இங்க பாரு SJ சூர்யா ரொம்ப பண்றீங்க..” ரஜினியே ஷாக்கான மொமண்ட்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com