செய்தியாளர் - M.மீரா
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்டோர் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘ராமாயணா’. இப்படத்தில் கதாபாத்திரங்களின் தோற்றத்தை மெருகேற்றுவதில் ஆபரணங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதற்காகவே 4,500-க்கும் மேற்பட்ட ஆபரணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
நகை வடிவமைப்பு நிறுவனமான டிரைப் அம்ரபாலி (Tribe Amrapali), இப்படத்தின் அதிகாரப்பூர்வ நகை வடிவமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக அந்நிறுவனக் குழு 18 மாதங்களுக்கும் மேலாக உழைத்துள்ளது. இந்தியாவின் பழங்கால நகைகள், கோயில் சிற்பங்கள், புராணங்கள் மற்றும் பாரம்பரியக் கலைகளை ஆய்வு செய்து இந்த ஆபரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மூன்று ராஜ்ஜியங்களுக்கு மூன்று விதமான வடிவமைப்புகள்!
ராமர், சீதை, ராவணன் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் வாழும் அயோத்தி, மிதிலை, இலங்கை ஆகிய மூன்று ராஜ்ஜியங்களுக்கும் தனித்துவமான நகை வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அயோத்தி ராஜ்ஜியத்துக்கான ஆபரணங்களில் அரச கம்பீரம் வெளிப்படும் வகையில் பாரம்பரிய வடிவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ராமரின் சூரிய வம்சத்தைக் குறிக்கும் சூரியன் போன்ற வடிவங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
சீதையின் நகைகளில் இயற்கை மற்றும் மலர் வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை அவரது மென்மை, தூய்மை மற்றும் உள்ளார்ந்த வலிமையை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கான நகைகள், ராவணனின் வலிமையையும் ராஜ்ஜியத்தின் ஆடம்பரத்தையும் காட்டும் வகையில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கூர்மையான வடிவங்கள், அடர் நிறக் கற்கள், நுணுக்கமான வேலைப்பாடுகள் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.
முதல் பாகத்திற்காக மட்டும் 4,500-க்கும் மேற்பட்ட நகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வடிவமைப்பாளர்கள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் நிபுணர்கள் இணைந்து இந்தப் பணியை நிறைவேற்றியுள்ளனர்.
‘ராமாயணா’ முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.