S. Janaki  web
சினிமா

பாடகி ஜானகி குறித்து பலரும் அறியாத 10 தகவல்கள்!

இந்திய இசை உலகை ஆளுமை செய்த ஜானகியின் அரிய பயணம், சாதனைகள், விருதுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பலரும் அறியாத 10 தகவல்கள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்..

PT WEB

இந்திய இசை உலகின் ஜாம்பவானான பாடகி ஜானகி, ஆந்திராவின் குண்டூரில் 1938ல் பிறந்து, 19 வயதில் சினிமா பாடகியாக அறிமுகமானார். சங்கீதம் முறையாக பயிலாமல் இயற்கை திறமையால் உயர்ந்தார். 60 தசாப்தங்களில் 48 ஆயிரம் பாடல்கள், 4 தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள், கலைமாமணி, ராஜ்யோட்சவ பிரசாஷ்டி உள்ளிட்ட பல கௌரவங்களை பெற்றார்.

செய்தியாளர் - கார்த்திகேயன்

இந்திய இசை உலகின் ஜாம்பவானான பாடகி ஜானகி, நேற்று மாலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது இறப்பு செய்தியை அறிந்து, பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாடகி ஜானகியின் நினைவை கூறும் விதமாக, அவரைப் பற்றி பலரும் அறியாத 10 தகவல்களை தற்போது காணலாம்...

1. 1938-ஆம் ஆண்டு, ஏப்ரல் 23-ம் தேதி அன்று, ஆந்திராவின் குண்டுர் மாவட்டத்தில் பிறந்த ஜானகி, தனது 19 வயதிலேயே சினிமா பாடகியாக அறிமுகமானார். இவ்வளவு சிறு வயதிலேயே சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும், இவர் முறையாக சங்கீதம் பயிலாமல், இயற்கையான திறமையுடனே, இதனை சாத்தியமாக்கியுள்ளார்.

S. Janaki

2. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ஜானகியின் தந்தை, ஒரு ஆயுர்வேத மருத்துவராக இருந்தவர் ஆவார்.

3. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஓடியா, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் மட்டுமல்லாது, ஆங்கிலம், ஜப்பனிஷ், ஜெர்மன், சிங்கலிஸ் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும், பாடல்களை பாடியிருக்கிறார்.

4. கடந்த 60 தசாப்தங்களாக சினிமா துறையில் வெற்றிகரமாக இயங்கி வந்த ஜானகி, இதுவரை 48 ஆயிரம் பாடல்களை பாடி, பெரும் சாதனையை படைத்திருக்கிறார்.

5. பாடகி ஜானகி-க்கு, கடந்த 2013-ம் ஆண்டு அன்று, பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. ஆனால், தான் இசைத்துறைக்கு வழங்கிய பங்களிப்பை வைத்து பார்க்கும்போது, தனக்கு தாமதமாகவே இந்த விருது வழங்கப்பட்டது என்று கூறி, அதனை அவர் நிராகரித்துவிட்டார்.

S. Janaki

6. பாடகி ஜானகி, இதுவரை 4 தேசிய விருதுகளையும், 33 பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றிருக்கிறார். மேலும், மைசூர் பல்கலைக்கழகம், பாடகி ஜானகிக்கு கௌரவ டாக்டர் பட்டத்தையும் வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு அரசிடம் இருந்து கலைமாமணி விருதையும், கர்நாடக அரசிடம் இருந்து ராஜ்யோட்சவ பிரசாஷ்டி ( Rajyotsava Prashasti ) விருதையும் பெற்றிருக்கிறார்.

7. கணவர் ராம்பிரசாத் மீது தீராத அன்பு கொண்டவர் பாடகி ஜானகி. இந்த அன்பின் வெளிபாடாக, கடந்த 1997-ம் ஆண்டு அன்று அவர் இறந்த பிறகு, வெறும் வெள்ளை சேலை மட்டுமே அணிய அவர் முடிவு எடுத்தார். பொதுமேடைகளில் எப்போதும் வௌ்ளை சேலையிலேயே ஜானகி இருப்பதற்கு, இதுதான் காரணம்.

8. குரலை மாற்றி பாடுவதில் ஜானகி மிகவும் வல்லமை கொண்டவர். இவரால், ஒரு குழந்தை போலவும், ஒரு வயதான நபர் போலவும் ஒரே சமயத்தில் பாட முடியும். சில மிருகங்களின் ஒலியை கூட, சுயமாக பாடல்களில் எழுப்புவாராம்.

S. Janaki

9. பல்வேறு உடல்நலக் காரணங்களால், பாடல் பாடுவதில் இருந்து 2017-ம் ஆண்டு அன்று ஓய்வு பெற்ற அவர், கடைசியாக பத்து கல்பனகல் என்ற மலையாள படத்தில் பாடல் பாடியிருந்தார்.

10. சில எமோஷனலான காட்சிகளை படமாக்கும்போது, படப்பிடிப்பு தளத்தில், அந்த காட்சிக்கான பாடலை, ஜானகியை வைத்து ஹம் செய்ய வைப்பார்களாம் சில இயக்குநர்கள். இவ்வாறு செய்யும்போது, அந்த காட்சியின் தன்மையை உணர்ந்து நடிகர்கள் நடிக்க முடியும் என்று இயக்குநர்கள் நம்பினார்களாம். அந்த அளவுக்கு அழுத்தமானதாக, அவரது குரல் இருந்துள்ளது.