தங்கள் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக இந்தியா மீது ட்ரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறார். இதை சரி செய்ய அதேயளவு வரியை பதிலுக்கு விதிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். இரு நாடுகளும் தங்களுக்குள் பொருட்களுக்கு விதிக்கும் வரி எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம்
அமெரிக்காவிலிருந்து வரும் ரசாயனம் மற்றும் மருந்து பொருட்களுக்கு இந்தியா 9.7% வரி விதிக்கிறது. இந்தியாவிலிருந்து வாங்கும் இதே பொருட்களுக்கு அமெரிக்கா 1% வரி மட்டுமே விதிக்கிறது. மின்சாரம், டெலிகாம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு இந்தியா 7.6% வரி விதிக்கும் நிலையில் அமெரிக்கா 0.4% வரி மட்டுமே விதிக்கிறது. வைரம், தங்கம் உள்ளிட்ட ஆபரண பொருட்களுக்கு இந்தியா 15.4% வரி விதிக்கும் நிலையில் அமெரிக்கா 2.1% வரி மட்டுமே விதிக்கிறது.
அமெரிக்க ஆடைகளுக்கு இந்தியா 10.4% வரி விதிக்கும் நிலையில் இந்திய ஆடைகளுக்கு அமெரிக்கா 9.0% வரி விதிக்கிறது. இயந்திரங்கள் இறக்குமதிக்கு இந்தியா 6.6% வரி விதிக்கும் நிலையில் அமெரிக்கா 1.3% மட்டுமே வரி விதிக்கிறது. அமெரிக்க விளைபொருட்களுக்கு இந்தியா 37.7% வரி விதிக்கும் நிலையில் இந்திய விளைபொருட்களுக்கு அமெரிக்கா 5.3% மட்டுமே வரி வசூலிக்கிறது.
இரும்பு மற்றும் அது சார்ந்த பொருட்களுக்கு இந்தியா 4.5% வரியும் அமெரிக்கா 2% வரியும் வசூலிக்கின்றன. அமெரிக்க வாகனங்களுக்கு இந்தியா 24.1% வரி வசூலிக்கும் நிலையில் இந்திய வாகனங்களுக்கு 1% வரியை மட்டுமே அமெரிக்கா வசூலிக்கிறது. பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களுக்கு இந்தியா 9.9% வரி விதிக்கும் நிலையில் அமெரிக்கா 4.4% வரியை மட்டுமே வசூலிக்கிறது.
இந்த மிகப்பெரிய வரி வேறுபாடுகளை சுட்டிக்காட்டித்தான் இந்தியா கடுமையாக வரி விதிப்பதாக ட்ரம்ப் குறைகூறி வருகிறார். இதை சரி செய்ய இந்தியா என்ன வரி விதிக்கிறதோ அதே அளவு வரியை RECIPROCAL TAX என்ற பெயரில் விதிக்கப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைத்து இந்த ஏற்றத்தாழ்வை சரி செய்ய இந்தியா தற்போது முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்க வாகனங்களில் இருந்து மது பானங்கள் வரை வரி குறைக்கப்பட்டுள்ளது