பிரியா நாயர் pt web
வணிகம்

யுனிலிவரின் முதல் பெண் சிஇஓ.. வரலாற்றை புரட்டிப்போட்ட பெண்.. யார் இந்த பிரியா நாயர்?

ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் 92 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண், சிஇஓ ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இது கார்ப்பரேட் உலகில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்தும் முயற்சியா? விரிவாக பார்க்கலாம்...

PT digital Desk

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, சீப்பு, ஷாம்புவில் தொடங்கி, ஜில் செய்வதற்காக ஆசையாக சாப்பிடும் கார்னட்டோ ஐஸ்க்ரீம் வரை எல்லாமே யுனிலிவர் தயாரிப்புகள்தான். கார்ப்பரேட் உலகின் ஜாம்பவனாக பார்க்கப்படும் இந்த யுனிலிவர் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய சந்தை இந்தியாதான். இதே இந்தியாவில் இருந்துதான் அந்நிறுவனம் தனது அடுத்த சிஇஓவையும் தேர்வு செய்துள்ளது. இன்னும் நெருக்கமாக சொல்லப்போனால் கேரளாவைப் பூர்விகமாக கொண்ட பிரியா நாயர்தான் யுனிலிவர் நிறுவனத்தின் அடுத்த நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரியா நாயர்

இப்பொழுது சிஇஓ ஆக இருக்கும் ரோஹித் ஜாவா, சொந்த காரணங்களுக்காக தனது பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில், அந்த பதவிக்கு வெளிநபர் ஒருவரை தேர்வு செய்ய நிறுவனம் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. வைரத்தை கையில் வைத்துக் கொண்டு தங்கத்தை வெளியில் தேடுவானேன் என எவ்வித தாமதமும் இன்றி தங்கள் நிறுவனத்தில் 30 ஆண்டுகளாக பணியாற்றும் பிரியா நாயரை ஒருமனதாக அந்நிறுவனம் தலைமை பொறுப்புக்கு தேர்வு செய்துள்ளது. எனில் பிரியா நாயருக்கு எத்தனை வயது என்ற கேள்வி எழுகிறதா?. ஆம் பிரியா நாயர் 50 வயதைக் கடந்தவர். தோற்றத்தில் மட்டுமல்ல, செய்யும் வேலையிலும் அவரது வயதை கணிக்க முடியாது. அப்படித்தான் கடந்த 30 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் சுழன்று சுழன்று ஓடி இப்போது சிஇஓ பொறுப்பில் அமர்ந்துள்ளார்.

படிப்படியான வளர்ச்சி

பெற்றோர் கேரள பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும், பிரியா பிறந்து வளர்ந்ததெல்லாம் மஹாராஷ்ட்ராவில்தான். புனேவில் வணிகப் படிப்பை முடித்த பிரியா, உடன் நிர்வாகக் கல்வியும் பயின்றவர். வணிகம் மற்றும் மார்க்கெடிங் துறையில் பிரியா செலுத்திய கவனமே அவரின் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு பாதை வகுத்துக் கொடுத்தது. படித்தவற்றை அப்படியே கக்காமல், அந்த துறையில் புதிய சிந்தனைகளைப் புகுத்தியதன் மூலமே பிரியா நாயர் தனக்கென தனி இடத்தை பிடித்தார். ஆரம்பத்தில் யுனிலிவர் நிறுவனத்தில் நுகர்வோர் நுண்ணறிவு மேலாளர் மற்றும் டவ், ரின், கம்ஃபோர்ட் உள்ளிட்ட முக்கிய ப்ராண்டுகளுக்கு மேலாளராக பணியாற்றினார் பிரியா நாயர். தொடர்ந்து, ஹோம் கேர் ப்ராடெக்டுகள் பிரிவின் செயல் இயக்குநராகவும், பின்னர் அழகு மற்றும் தனிநபர் பராமரிப்பு பிரிவின் செயல் இயக்குநராகவும் பதவி வகித்தார். தொடர்ந்து அந்நிறுவனத்தின் க்ளோபல் சீஃப் மார்க்கெட்டிங் அதிகாரியாக பதவி உயர்ந்தார்.

பிரியா நாயர்

இப்போது அங்கிருந்து சிஇஓ பதவிக்கு தாவியுள்ளார். முன்பே தன் நிறுவன பிராண்டுகளை வெற்றியடையச் செய்வதிலும் பாமர மக்கள் வரை கொண்டு செல்வதிலும் பிரியா சிறப்பாக பணியாற்றினார். அதற்கு சிறந்த அங்கீகாரமாக அவருக்கு கேன்ஸ் லயன்ஸ் சர்வதேச படைப்பாற்ற விழாவில் 3 கோல்ட் லயன் விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், முழுவதும் தன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள 13 பில்லியன் யூரோ மதிப்பு கொண்ட யுனிலிவர் நிறுவனத்தை, தனிப்பெரும் தலைமையாக பிரியா எப்படி கையாளப் போகிறார் என்பதை ஒட்டுமொத்த கார்ப்பரேட் உலகமும் எதிர்நோக்கியுள்ளது.