E. இந்து
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் தங்கத்தின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
2010ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.18,500 ஆக இருந்தது. 2020ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கம் ரூ.48,600க்கு விற்பனையானது. இப்படி, 2020 முதல் தற்போதுவரை தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. அந்த வகையில், சென்னையில் இன்று (மே 14) 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9,605க்கும், 8 கிராம் ரூ.76,840க்கும் விற்பனையாகிறது.
புவிசார் அரசியல், நாடுகளுக்கு இடையேயான மோதல், பதற்றம் ஆகியவை தற்போது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு நாடுகளும் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை அதிகம் வாங்குகின்றன. இதனால், தங்கத்தின் தேவை அதிகரிக்கிறது. இதுவே தங்க விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
உலகளவில் வல்லரசு நாடாக உள்ள அமெரிக்காவில் பொருளாதார நிலை எப்படி இருக்கும் மற்றும் அரசாங்க கடன் பிரச்சனை போன்றவையும் தங்கத்தின் விலையை வெகுவாக பாதிக்கின்றன.
நாடுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் தங்கத்தை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
முக்கியமாக, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரியை அவர் விதித்தார். அதில் சீனா மீது 245% வரி விதிக்கப்பட்டது. மேலும், வர்த்தக போர் காரணமாக பிற நாடுகளின் நாணயத்தை ஒப்பிடும் போது அமெரிக்காவின் டாலர் மதிப்பு நிலையானதாக இல்லை.
பங்குச்சந்தை, அரசு பத்திரங்கள், கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட மற்ற முதலீடுகளில் நிலையற்ற தன்மை காணப்படுவதாலும் தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருகிறது.
இந்தவகையில், தங்கத்தின் விலை குறித்து ஜே.பி.மோர்கன் என்ற சர்வதேச ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்கள் வியக்க வைக்கும் தகவலை தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வின்படி, தற்போது தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 3200த்திற்கு விற்பனையாகும் நிலையில் 2029ஆம் ஆண்டில் 6000 டாலருக்கு விற்பனையாகும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த வகையில், 2029 ஆம் ஆண்டு தங்கத்தின் விலை 80 சதவீதம் உயர்ந்து காணப்படும் என ஆய்வறிக்கைகள் கூறிகின்றனர்.