telegram pt web
வணிகம்

வீறுநடையில் டெலிகிராம்.. வாங்கிய கடனில் பெரும்பகுதியை செலுத்தி அசத்தல்! அடுத்தடுத்த திட்டங்கள் என்ன?

டெலிகிராம் லாபகரமான செயலியாக மாறியுள்ளதாக அதன் நிறுவனர் பாவல் டுரோவ் தெரிவித்துள்ளார். இப்போதே 100 கோடிக்கும் அதிகமான பயனாளார்களை கொண்டுள்ள டெலிகிராமின் பயன்பாடு வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PT WEB

செய்தியாளர் பால வெற்றிவேல்

பொழுதுபோக்காளர்கள் தொடங்கி புரட்சியாளர்கள் வரை விரும்பிப் பயன்படுத்தும் செயலிகளில் டெலிகிராம் குறிப்பிடத்தக்க இடத்தில் இருக்கிறது. 2024ஆம் ஆண்டில் உலக அளவில் WhatsApp, Facebook, Instagram, YouTube, மற்றும் TikTok போன்ற சமூக வலைத்தளங்களுக்குப் பின்னே telegram பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஆறாவது இடத்தில் இருக்கிறது.

அதன் பயனர் அனுபவம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் தனித்துவமானதாக இருப்பதால் பயனாளர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெலிகிராமை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நூறு கோடியை தாண்டிவிட்டது. டெலிகிராம் லாபகரமான நிறுவனமாக மாறி இருப்பதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

2024-ஆம் ஆண்டில் பிரீமியம் சந்தாதாரர்கள் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்து, 1.2 கோடியை தாண்டியது. இதனால், நிறுவனத்தின் மொத்த வருமானம் இந்திய மதிப்பில் 8,500 கோடி ரூபாயை கடந்தாண்டு ஈட்டியது. மேலும், கிரிப்டோ சொத்துகளை தவிர்த்து, 4,250 கோடி பணச் சேமிப்புகளுடன் இந்த ஆண்டை முடிக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் டெலிகிராம் வாங்கிய கடனில் பெரும் பகுதியை திருப்பிச் செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலைச் சலுகைகளை பயன்படுத்தி, நிறுவனத்தின் நிதி மேலாண்மையில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் டெலிகிராமின் நிறுவனர் தெரிவித்துள்ளார். வரும் காலத்தில் பரிசுகள் வழங்குதல் மற்றொரு செயலியை உருவாக்குதல், வணிகத்திற்கான தனித்தலத்தை உருவாக்குதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட உள்ளதாக டெலிகிராம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டெலிகிராம் நிறுவனர் டுரோவ் எக்ஸ் தளத்தில் இது குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.

டெலிகிராம் என்பது ரஷ்ய நாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு சமூக வலைத்தளம். இந்த செயலியை பாவல் டுரோவ் மற்றும் அவரின் சகோதரர் நிக்கோலா டுரோவ் 2013 இல் உருவாக்கினர். பிரீமியம் சந்தாதாரர்களுக்கு பெரிய அளவில் சலுகை கொடுக்கப்படுவதால் ஆசிய நாடுகளில் டெலிகிராம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் சாதாரண பயனாளர்களை கவரும் வகையில் அதிக ஸ்பேஸ் கொண்ட தரவுகளை அனுப்பும் வசதி, திரைப்படம் டாக்குமெண்ட்ஸ் உள்ளிட்டவை பெரும் வசதியும் இருப்பது இளம் தலைமுறையினரை telegram-யை நோக்கி ஈர்த்து வருகிறது.