வணிகம்

செப்டம்பரில் 14 லட்சம் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களை இழந்தது தமிழ்நாடு

JustinDurai
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சுமார் 14 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன தொலைத்தொடர்பு நிறுவனங்கள்.
தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொலைத்தொடர்பு துறை நிறுவனங்களின் இணைப்புகள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடந்த செப்டம்பர் மாத இணைப்புகள் குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அந்த புள்ளி விவரத்தின்படி, தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8.29 கோடியாக இருந்த தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை செப்டம்பரில் 8.15 கோடியாக குறைந்துள்ளது.
மும்பை மற்றும் கொல்கத்தா தொலைத்தொடர்பு வட்டாரங்களுக்கு அடுத்தபடியாக சென்னை தொலைத்தொடர்பு வட்டாரம் உள்பட தமிழ்நாடு, அதிக எண்ணிக்கையிலான வயர்லெஸ் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களை நிறுவனங்கள் இழந்துள்ளன. பார்தி ஏர்டெல் தவிர, மற்ற அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களும் தமிழ்நாட்டில் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட அதிகபட்ச சரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
கட்டாயமாக ரீசார்ஜ் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுவதால் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் வைத்திருப்பவர்கள் தேவைப்படாத எண்களை தவிர்த்து வருவதும் இதற்கு ஒரு காரணம் எனக் குறிப்பிடும் நுகர்வோர் அமைப்பினர், இந்த இழப்பை புதிய சந்தாதாரர்களின் நுழைவு மூலம் ஈடுசெய்யப்படும் என்று கூறுகின்றனர்.