Silver jewelry  Reuters
வணிகம்

தங்கத்தை அடுத்து வெள்ளி! புது Rules வந்தாச்சு மக்களே! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

வெள்ளி நகை வாங்கப் போறீங்களா? அவசரப்படாதீங்க... தங்கத்தைப் போலவே வெள்ளி நகைகளுக்கும் 'ஹால்மார்க்'-ஐ கட்டாயமாக்கும் புதிய நடைமுறை வரவுள்ளது. அதை பற்றிய முழுத் தகவலை அலசுகிறது இந்த பதிவு.

PT WEB

இந்தியாவில் தங்க நகைகளைப் போலவே வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்க BIS புதிய விதிகளை கொண்டு வருகிறது. அடுத்த மாதம் முதல் அமலாகும் இந்த நடைமுறையால், 6 இலக்க அடையாள எண், BIS முத்திரை, தர விவரங்கள் கொண்ட வெள்ளி நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதனால் நுகர்வோர் பாதுகாப்பு, தர நம்பிக்கை, ஒழுங்குமுறை வலுப்படும்.

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

விரைவில் தங்க நகைகளைப் போலவே வெள்ளி நகைகளுக்கும் ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான நடைமுறை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் நுகர்வு பாதுகாப்பை உறுதி செய்வதுடன், ஒழுங்குமுறையை கடைப்பிடிப்பதற்காக வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை வழங்கும் நடைமுறை கொண்டுவரப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டது. முதற்கட்டமாக 400 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது.

Jewelry

இதற்காக 6 இலக்க தனித்துவ அடையாள எண்ணைக் கொண்ட ஹால்மார்க் முத்திரை மற்றும் அதற்கான உள்கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பான BIS, 102 மாவட்டங்களில் 341 வெள்ளி பரிசோதனை மையங்களை நடத்தி வருகிறது. மேலும் 25 ஆயிரம் நகை வியாபாரிகள் இதில் பதிவு செய்துள்ளனர். வெள்ளி நகைகளுக்கான தரநிலை மையங்களையும் BIS அமைப்பு அதிகரித்து வருகிறது.

2005-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், தற்போது வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளில் BIS முத்திரை, தரம் மற்றும் தனித்துவ அடையாள எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும்.

இதன் மூலம் வெள்ளியின் தரம் குறித்து வாடிக்கையாளர்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும். மேலும், தூய்மையான வெள்ளியைப் பெறுவதற்கான நம்பகத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மட்டுமல்லாமல் BIS சட்டம் 2016-ன் படி, விதிகளை மீறும் வியாபாரிகளுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.