செய்தியாளர்கள் : நவீன் & கௌசல்யா
2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அந்த ஆண்டுக்கான குறைந்த அளவாக தங்கம் ஒரு சவரன் 45 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அடுத்து வந்த நாட்களில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம், அக்டோபர் 31ஆம் தேதி அப்போதைய புதிய உச்சமாக ஒரு சவரன் 59 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், நடப்பாண்டின் ஜனவரி 22ஆம் தேதி வரலாறு காணாத ஏற்றமாக ஒரு சவரன் 60 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
அமெரிக்ககா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பொருளாதார சூழல்கள், பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை போட்டிப்போட்டுக் கொண்டு வாங்குவதும் தங்கம் விலை அதிகரிக்க காரணமாகக் கூறப்படுகிறது. உள்நாட்டை பொறுத்தவரை திருமண சீசன் என்பதால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதும் விலை உயரக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் நாட்களிலும் தங்கம் விலை உயர வாய்ப்பிருப்பதாக கூறும் பொருளாதார நிபுணர் தாமஸ் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்தது எனக் கூறுகிறார்.
அவர் கூறுகையில், “தங்கம் என்பது நல்ல முதலீடு. நமது மொத்த முதலீட்டில் 10% ஆவது தங்கமாக இருக்க வேண்டும். ஆபரணமாகவும் இருக்கலாம், அப்படி இல்லையெனில் egold, டிஜிட்டல் gold அல்லது gold ETF என பலமுறைகளில் நாம் தங்கத்தில் முதலீடு செய்யலாம்” எனத் தெரிவித்தார்,
சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்றத்துடன் உள்ளதால், அது ஆபரணத் தங்கம் விலையிலும் எதிரொலிக்கிறது. ஆபரணத் தங்கத்தை பராமரிப்பதில் ஆபத்து நிறைய உள்ளதால், அவரவர் வசதிக்கு ஏற்ப தங்கத்தில் உள்ள மாற்று முதலீட்டு திட்டங்களையும் தேர்வு செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.