adani
adani twitter
வணிகம்

பசுமை ஆற்றல் உற்பத்தி! ரூ.9,350 கோடியை முதலீடு செய்ய அதானி குழுமம் திட்டம்!

Prakash J

அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் எனும் அமெரிக்க நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதனால் அதானி குழுமப் பங்குகள் கடுமையான வீழ்ச்சியடைந்து தற்போது அதிலிருந்து மீண்டெழுந்து வருகின்றன. அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தில் நீதிமன்றம் அளித்த பதில், இலங்கை துறைமுகத்திற்கு அமெரிக்க நிதி அமைப்பு கொடுத்த கடன் சான்றிதழ், 5 மாநில தேர்தல் முடிவுகள், 2024 தேர்தல் கருத்துக்கணிப்புகள் ஆகியன அதானி நிறுவனப் பங்குகளுக்குச் சாதகமாக மாறி மீண்டும் அசுரவளர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதானி குழுமம்

இந்த நிலையில், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தில், கெளதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் 9,350 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: இன்ஃபினிக்ஸ்: இந்தியாவில் லேப்டாப் தயாரிக்கும் சீன நிறுவனம்.. 75,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு!

இந்த முதலீடு, வரும் 2030ஆம் ஆண்டுக்குள், அதானி க்ரீன் எனர்ஜி, 45 ஜிகாவாட் திறனை அடையவும், அதன் மூலதனச் செலவீனத்துக்காகவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கு ஒன்று 1,480.75 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு, 9,350 கோடி ரூபாய்க்கு, மொத்த பரிவர்த்தனையையும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 20.6 கிகாவாட் உற்பத்தியுடன் அதானி பசுமை ஆற்றல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 9,350 கோடி ரூபாய் 45 கிகாவாட் இலக்கை அடைவதற்கு உதவும் என்றும் கருதப்படுகிறது.

எனினும், இந்தப் பரிவர்த்தனை அடுத்தாண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்குபெறும் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது. இந்த முதலீடு தொடர்பாக பேசியுள்ள அதானி குழுமத் தலைவர் அதானி, ”அதானி குடும்பத்தின் இந்த முதலீடு எங்கள் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. நமது தேசத்தில் தூய்மையான எரிசக்தி கனவை நனவாக்குவதுடன், சமமான ஆற்றல் மாற்றத்தையும் ஏற்படுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

பசுமை ஆற்றல் உற்பத்தி

முன்னதாக, அதானி கிரீன் எனர்ஜி, குஜராத்தின் கவ்டாவில் 2,167 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டங்களின் கட்டுமான வசதியை தொடங்க, 8 முன்னணி சர்வதேச வங்கிகளிடமிருந்து 11,288 கோடி ரூபாய் நிதியுதவி பெற்றது. மேலும், 25,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மூலதனத்தை திரட்டவுள்ளதாகவும் அறிவித்திருந்தது. இதன்மூலமாகவும் 2030ம் ஆண்டுக்குள் அவர்களின் இலக்கான 45 கிகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று அதானி குழுமம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: மராத்தா இடஒதுக்கீடு: மீண்டும் களத்தில் குதித்த மனோஜ் ஜராங்கே.. ஜன.20 மும்பையில் 10 லட்சம் வாகனங்கள்!