இன்ஃபினிக்ஸ்: இந்தியாவில் லேப்டாப் தயாரிக்கும் சீன நிறுவனம்.. 75,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு!

சீனாவின் மொபைல் தயாரிப்பு நிறுவனமான இன்ஃபினிக்ஸ் (Infinix), இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் லேப்டாப்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
model image
model imagetwitter

2013ஆம் ஆண்டு முதல் மொபைல் போன்களைத் தயாரித்து வரும் சீன நிறுவனமான இன்ஃபினிக்ஸ், இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டுமுதல் உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து மொபைல் போன்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. உலகளவில் அதிகம் விற்பனையாகும் மொபைல் நிறுவனங்களில் இந்நிறுவனமும் முதல் 5 இடங்களுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்நிறுவனம் கடந்த 2021 முதல் முதல் லேப்டாப்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் லேப்டாப்களைத் தயாரித்து விற்பனை செய்யும் முடிவுகளைக் கையிலெடுத்து அதற்கான பணிகளில் களமிறங்கி உள்ளது.

இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி அனிஷ் கபூர், ”இந்தியாவில் மடிக்கணினிகள் தயாரிக்க உள்ளோம். இதற்கான பணிகளில் முதற்கட்டமாக இறங்கியுள்ளோம். அதற்கான மதிப்பீடுகள் குறித்து பேசி வருகிறோம். குறிப்பாக உள்ளூர் உற்பத்தி குறித்து நிறுவனங்களிடம் பேசி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அந்நிறுவனத்தின் மடிக்கணினி உற்பத்தியை அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இத்திட்டம் ரூ. 2,430 கோடி மதிப்பிலான முதலீடுகளைப் பெறும் எனவும், இதன்மூலம் 75,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com