அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு 25 சதவீத வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். 2023ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு எஃகு மற்றும் அலுமினியத்தை அதிகமாக ஏற்றுமதி செய்த 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிக வரிவிதிப்பால் இந்த நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அமெரிக்காவிற்கு எஃகு மற்றும் அலுமினியத்தை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடான கனடா( $25.26 பில்லியன்), வரிகளால் அதிகம் பாதிக்கப்படும். அடுத்ததாக சீனா, மெக்ஸிகோ, வடகொரியா, பிரேசில், ஜெர்மனி, தைவான் உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்து அதிக அளவில் எஃகு மற்றும் அலுமினியத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகளாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவின் வரி அதிகரிப்பால் இந்தியாவின் ஏற்றுமதியில் மந்தநிலை ஏற்படும். இறக்குமதியை நம்பியுள்ள இந்திய உற்பத்தியாளர்களுக்கான உற்பத்தி செலவுகள் அதிகரிக்கும்.
அமெரிக்கா வரியை அதிகரித்திருப்பதன் காரணமாக ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான ஏற்றுமதியை இந்தியா அதிகரிக்கக்கூடும். அதே நேரத்தில் சீனா மற்றும் கனடாவை தாண்டி அமெரிக்கா எஃகு மற்றும் அலுமினியத்திற்கு மாற்று சப்ளையர்களைத் தேடினால் அதனால் இந்தியா பயனடையக்கூடும். இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2024 -ல் 2 லட்சம் மெட்ரிக் டன் எஃகு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இந்தியாவிலிருந்து 1.60 லட்சம் மெட்ரிக் டன் அலுமினிய பொருட்களை கடந்த 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.