தங்கத்தின் விலை சரியத் தொடங்கியிருக்கிறது. இன்று தங்கம் கிராமிற்கு 75 ரூபாய் குறைந்து, சவரனுக்கு 600 ரூபாய் குறைந்திருக்கிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 9155 ரூபாய்க்கும், சவரன் 73240 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கத்தின் விலை 3400 அமெரிக்க டாலர்கள் வரை உயர வாய்ப்பிருக்கிறது என கணித்திருந்தது மார்கன் ஸ்டான்லி நிறுவனம். ஆனால், இந்த மேஜிக் எண்ணை ஏப்ரல் மாதமே தொட்டது தங்கம். பல்வேறு நாடுகளுக்கு இடையேயான போர்ச்சூழல்; அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வர்த்தக ஒப்பந்தங்கள் என பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலை அசுர வேகத்தில் உயர்ந்தது.
மத்திய வங்கிகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்கத்தை வாங்கின. சீனா போன்ற நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்வதை குறைக்கவில்லை. இது உலகம் முழுக்க தங்கத்தின் விலையில் எதிரொலித்தது. அதிலும் அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஜெரோம் பவல் மீதான தன் விமர்சனங்களை கடுமையாக்கி, ரேட் கட் நிச்சயம் வேண்டும் என அழுத்தம் கொடுத்த போது, தங்கம் 3500 அமெரிக்க டாலர்களை கடந்தது.
அதன்பின் கொஞ்சம் கூலான தங்கத்தின் விலை, ஜூன் மாதத்தில் மீண்டு உயர்ந்தது. இந்தியாவின் MCXல் ஜூன் இரண்டாம் வாரத்தில் தங்கம் லட்ச ரூபாயைக் கடந்தது. ஜூன் மாதம் தான், மியூச்சுவல் ஃபண்டு நிறுவனமான குவாண்ட் அடுத்த இரண்டு மாதங்களில் தங்கம் 12 முதல் 15 சதவீதம் வரை குறைய வாய்ப்பிருக்கிறது என கணித்திருந்தது.
இந்த ஆண்டு தங்கம் ஏற்கெனவே குறுகிய காலத்தில் 30 சதவிதம் வரை உயர்ந்துவிட்டதால் , இதன் பின்னர், சிறிய அளவில் தங்கம் குறைய வாய்ப்பிருப்பதாக கணித்தது குவான்ட். குவான்ட் இவ்வாறாக அறிவிப்பதற்கும், ஈரான் இஸ்ரேல் போர் தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. அதெப்படி தங்கத்தின் விலை குறையலாம் என்பதாக உலகத்துக்கு புதிது புதிதாக வந்துகொண்டே இருந்தது. அதில் கடைசியாக வந்து சேர்ந்தது தான் ஈரான் இஸ்ரேல் போர்.
ஆனால், போர் தொடங்கிய பின்னும் தங்கத்தில் பெரிய அளவிலான அதிரடி மாற்றங்கள் நிகழாமல் இருந்தன. குவான்ட்டைப் போலவே பொருளாதார நிபுணர் சந்தீப் அக்ரவாலும் தங்கத்தின் விலை மீதமுள்ள மாதங்களில் 15 சதவிதம் குறைய வாய்ப்பிருப்பதாக X தளத்தில் குறிப்பிட்டிக்கிறார். தங்கத்தில் தேவையைவிட அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுவிட்டது, எனவே இனி தங்கத்தின் விலை சரிய வாய்ப்புக்கள் அதிகம் என்கிறார் அவர்.
இப்போது இஸ்ரேல் ~ ஈரான் போர் முடிவுக்கு வந்துவிட்ட சூழலில், உலகம் முழுக்க பெரிய போர்ச் சூழல் எதுவும் இல்லை. ரஷ்யா, உக்ரைன் போரால் அந்தஹ் இரு தேசங்கள் தவிர பெரிய அளவிலான சங்கிலித் தொடர் சிக்கல்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை. மத்திய வங்கிகள் அதிரடியாக தங்கத்தின் முதலீடு செய்யவில்லை எனில், தங்கத்தின் விலையில் சிறிய அளவிலான மாற்றம் இருக்கும் என கணிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். 15 சதவிதம் வரை தங்கம் குறைந்தால் நிச்சயம் மக்கள் டிபன் காபி என்றெல்லாம் யோசிக்காமல், ஃபுல் மீல்ஸ் அளவுக்கே தங்கத்தை ஒரு பிடி பிடிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.