தங்கம் விலை தொடர்ந்து உயர காரணங்கள் என்ன web
தங்கம்

தங்கம் விலை உச்சம்| 2006-ல் ரூ.6000.. 2026-ல் ரூ.134,400..! 15 ஆண்டில் 8 மடங்கு உயர்வு! காரணம் என்ன?

தங்கம் விலை கடந்த 15 ஆண்டுகளில் 8 மடங்கு உயர்ந்துள்ளது சாமான்யர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Rishan Vengai

தங்கத்தின் விலை கடந்த 15 ஆண்டுகளில் 8 மடங்கு உயர்ந்துள்ளது. 2006-ல் ஒரு சவரன் தங்கம் ரூ.6000-ஆக இருந்தது, ஆனால் 2026-ல் அது ரூ.134,400-ஆக உயர்ந்துள்ளது. புவிசார் அரசியல் பதற்றங்கள், உலகளாவிய பொருளாதார மாற்றங்கள், மற்றும் மையவங்கிகளின் தங்க கையிருப்பு ஆகியவை இந்த விலை உயர்வுக்கு காரணமாக உள்ளன.

தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு விலையேறும் என 5 ஆண்டுகளுக்கு முன் பொருளாதார நிபுணர்கள் சொல்லும்போது பலரும் அதை நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், தற்போது நம்பமுடியாத அளவிற்கு அதன் விலையேற்றம் உள்ளது.

1920ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கத்தின் விலை 21 ரூபாயாக இருந்தது. அது 3 மடங்காக உயர 35 வருடங்களானது. முதன்முறையாக தங்கத்தின் விலை 1980களில் தான் சவரன் ஆயிரத்தை தொட்டது. 2006ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கத்தின் விலை 6ஆயிரம் ரூபாய் மட்டுமே. கடந்த 2020ஆம்ஆண்டு தொடக்கத்தில் தங்கத்தின் விலை சவரன் 42 ஆயிரம் ரூபாயாக இருந்தது.

தங்கம் விலை உயர்வு

கடந்தாண்டு இறுதியில் ஒருசவரன் தங்கம் விலை ஒரு லட்சத்து 120 ரூபாய் மட்டுமே. கடந்த 29 நாட்களில் மட்டும் சுமார் 30ஆயிரம் விலை உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 34ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காரணம் என்ன?

தங்கம் விலை உயர்ந்து வருகிறது என்பதை விட கைக்கெட்டா தூரம் பறந்து செல்வது போன்றே உள்ளது. இந்த அதிவேக விலை உயர்வுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உள்ளன. இதில் முதலாவது புவிசார் அரசியல் பதற்றங்கள். உலகளவில் பல்வேறு நாடுகள் இடையே நிலவும் போர்ச்சூழல், அரசியல் நிலையற்ற தன்மை முதலீட்டாளர்களை அச்சமடைய செய்துள்ளது. இதனால் பாதுகாப்பான முதலீடாக கருதி தங்கத்தை வாங்கும்போக்கு அதிகரித்துள்ளது.

உலக நாடுகள் டாலர் பொதுப்பணம் என்ற நிலையிலிருந்து மாற்று முறைகளுக்கு மாறத்தொடங்கியிருப்பதும் உலகவர்த்தகத்தில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கி தங்கத்திற்கான தேவையை அதிகரிக்கிறது.

தங்கம்

பல்வேறு நாட்டு மையவங்கிகள் முன்னெச்சரிக்கையாக தங்கத்தை அதிகளவில் வாங்கி கையிருப்பு வைப்பதும் அதற்கான தேவையை அதிகரிக்கிறது. சீனா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் என எந்த நாட்டையும் விட்டுவைக்காமல் அமெரிக்கா அதிரடியாக வரிகளை உயர்த்தியுள்ளதும் குழப்பங்களை அதிகரித்துள்ளது. இதுவும் முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி தள்ளுகிறது.

அமெரிக்காவின் மத்தியவங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அல்லது வட்டி விகிதத்தை நிலையாக வைத்திருப்பது தங்கத்திற்குச் சாதகமாக அமைகிறது. இவையெல்லாம் சர்வதேச காரணங்களாக உள்ள நிலையில் இந்தியாவுக்கு என தனியாக ஒருபிரச்சினை உள்ளது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளதும் அதை வாங்குவதற்கான செலவுகளை அதிகரிக்கிறது.