இந்தியாவில் தங்கத்தின் விலை 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 50% உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் 1 கிராமுக்கு ₹11,385 க்கு விற்பனை செய்யப்பட்டு வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
ஆண்டின் துவக்கத்தில் ரூ.60 ஆயிரத்தில் இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை தற்போது கிட்டத்தட்ட ரூ.91 ஆயிரத்தைத் தொட்டிருக்கிறது. ஏறத்தாழ ஒரு ஆண்டுக்குள் ரூ.30 ஆயிரத்திற்கும் மேலாக அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்திருக்கிறது. இன்று காலை 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக கிராமுக்கு 85 ரூபாய் அதிகரித்து 11 ஆயிரத்து 385 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனையடுத்து, சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூ.1480 உயர்ந்து ரூ.91,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலக பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலை, உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை போன்றவை காரணமாக பல முதலீட்டாளர்கள் தங்கத்தை "பாதுகாப்பான முதலீடாக" மாற்றுவதும் தங்கத்தின் விலையேற்றத்திற்கு காரணமாக இருக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவில் நடந்து வரும் போர்கள் மற்றும் பதட்டங்கள் உள்ளிட்ட புவிசார் அரசியல் நெருக்கடிகள் உலகளவில் தங்கத்தின் தேவையை மேலும் அதிகரித்துள்ளன.
அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாகவும் ’தங்கம்’ தனது மதிப்பைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதால், மக்கள் அதனை அதிகமாக நாடுகிறார்கள்.
அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. இதனால் சர்வதேச தங்க இறக்குமதி அதிக விலை கொண்டதாகவும், உள்நாட்டு விலைகள் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் ரிசர்வ் வங்கி உட்பட முக்கிய மத்திய வங்கிகள், தங்களுக்கான இருப்புக்களுக்காக அதிக தங்கத்தை வாங்குகின்றன. இது சந்தைகளில் தங்கத்தின் விலை உயர காரணமாக இருக்கிறது.
2025 ஆம் ஆண்டில் தங்க ETF-களிலும், பன்னாட்டு நிதிகளிலும் முதலீட்டுத் தொகைகள் பெருமளவில் உயர்ந்துள்ளன. இது தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடு மற்றும் பணவீக்கத்திற்கான எதிர் பாதுகாப்பாகக் கருதும் உலகளாவிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது
திருமணங்கள் மற்றும் பண்டிகைகளுக்கான பருவகால உள்நாட்டு தேவை இந்த ஆண்டு தங்கத்தின் விலையில் உயர்வை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டின் எஞ்சிய காலத்திற்கு ஆபரத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,00,000 க்கு மேல் போகலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பணவீக்கம் மேலும் உயர்ந்தாலோ அல்லது உலகளாவிய நெருக்கடிகள் மேலும் உயர்ந்தாலோ தங்கத்தின் விலை அடுத்த வருடத்திற்குள் சவரனுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரத்தைத் தொடும் என்கின்றனர் வல்லுநர்கள்.