தங்கம், வெள்ளி உச்சத்தை எட்டிய நிலையில், கடந்த 2 நாட்களாக விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் அரசியல் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற சூழல் போன்றவற்றால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைப் பாதுகாக்க தங்கத்தில் முதலீடு செய்வதால், அதற்கான தேவை அதிகரித்து விலை உயர்கிறது. வெள்ளி பெரும்பாலும் தொழில் பயன்பாட்டுக்கானது. மின்வாகனம், சோலார் பேனல் தயாரிப்புகளால் வெள்ளிக்கான தேவையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை வேகமாக உயர்வதால், முதலீட்டாளர்கள் தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளியிலும் முதலீடு செய்யும் போக்கும் உருவாகியுள்ளது.
இந்தசூழலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரலாறு காணாத அளவு ஒரே நாளில் தங்கம் விலை 9000 ரூபாய்க்கு மேல் உயர்ந்து சவரனுக்கு 1 லட்சத்து 34ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையாகி அதிர்ச்சி கொடுத்தது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு இருந்துவருகிறது. அதற்கான காரணம் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்..
கடந்த இரண்டு நாட்களில் தங்கம், வெள்ளி பெரும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஒரு சவரன்தங்கம் 1 லட்சத்து 34 ஆயிரமாகவும் ஒருகிலோ வெள்ளி 4 லட்சத்து 25ஆயிரமாகவும் உச்சம் தொட்டது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் தங்கம் சவரனுக்கு 15 ஆயிரத்து 200 ரூபாயும், வெள்ளி கிலோவுக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயும் சரிந்துள்ளது. இந்தசரிவுக்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது.
மெரிக்க ரிசர்வ் வங்கியின் புதிய தலைவராக ட்ரம்ப் தனக்கு நெருக்கமான பொருளாதார நிபுணர் கெவின் வார்ஷின்-ஐ பரிந்துரைத்துள்ளார். ட்ரம்ப் ஆதரவாளரான கெவின் வார்ஷ், டாலர்மதிப்பை உயர்த்த தீவிர நடவடிக்கை மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன் எதிரொலியாக தங்கம், வெள்ளி விலையில் சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேபோல், தங்கம், வெள்ளி வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில், அதன் மூலமான லாபத்தை உறுதிசெய்வதற்காக முதலீட்டாளர்கள் அவற்றை சிறிதளவு விற்கதொடங்கியதும் விலை குறைவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.